2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நக்சலைட்கள் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்களில் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற எச்சரிக்கை அவர்கள் தரப்பில் விடுக்கப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடாவில் மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணி வெடிகுண்டு தாக்குதலில் பா.ஜனதா எம்.எல்.ஏ. சிக்கியுள்ளார்.
கவ்குண்டா, ஷியாம்கிரி இடையே வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுக்கி வைத்திருந்த கண்ணி வெடிகுண்டு வெடித்ததில் பாரதீய ஜனதா எம்எல்ஏ, அவருடைய உதவியாளர்கள், போலீசார் சென்று கொண்டிருந்த வாகனம் சிக்கியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் பாரதீய ஜனதா எம்எல்ஏ பீமா மாண்டவி உயிரிழந்தார். பாதுகாப்புக்கு சென்ற மாநில போலீஸ் படையை சேர்ந்த 5 வீரர்களும் உயிரிழந்தனர்.
சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்ததும் மத்திய சிஆர்பிஎப் படை வீரர்கள் விரைந்துள்ளனர். மாவோயிஸ்டுகளின் தாக்குதலை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக விரிவான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.