செய்திகள்

பா.ஜனதா எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ய தயார்? செல்போன் உரையாடல் வெளியாகி பரபரப்பு

ஆபரேஷன் தாமரைக்கு பதிலடி கொடுக்க ஆளுங்கூட்டணி தயாராகி வருகிறது. இந்த நிலையில் பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக செல்போன் உரையாடல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது. இதற்காக ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் சிலரை இழுக்க அக்கட்சி முயற்சி செய்தது. அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.

இதையடுத்து, நாடாளுமன்ற தேர்தல் முடிவு வெளியான பிறகு இந்த கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும் என்று பா.ஜனதா கட்சி தலைவர்கள் கூறி வருகிறார்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுத்தால் அதற்கு பதிலடி தரும் விதத்தில் பா.ஜனதாவை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்களை காங்கிரசுக்கு அழைத்துவர கூட்டணி கட்சி நிர்வாகிகள் சிலர் முயற்சி செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த தேவானந்த சவுகான், கட்சி நிர்வாகி ஒருவருடன் செல்போனில் பேசிய உரையாடல் பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், பா.ஜனதாவை சேர்ந்த சோமனகவுடா பட்டீல் எம்.எல்.ஏ. (தேவரஹிப்பரகி தொகுதி) பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரசில் சேர தயாராக உள்ளார். போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல் பச்சைக்கொடி காட்டினால், அவர் எந்த நேரத்திலும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் தான் அவ்வாறு கூறவில்லை என்று தேவானந்த சவுகான் அந்த உரையாடலை மறுத்துள்ளார். அதே போல், பா.ஜனதா கட்சியை விட்டு விலக நான் தயாராக இல்லை என்று சோமனகவுடா பட்டீலும் கூறி இருக்கிறார். பா.ஜனதாவை விட்டு விலகும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் கூறினார். இந்த செல்போன் உரையாடல் பதிவு, கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது