பெங்களூரு
கர்நாடகத்தை சேர்ந்த நிழல் உலக தாதாவான ரவி பூஜாரி கடந்த பல ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில், மேற்கு ஆப்பிரிக்கா நாட்டில் தலைமறைவாக இருந்த ரவி பூஜாரி கைது செய்யப்பட்டுள்ளார். இதுபற்றி நேற்று முன்தினம் கருத்து தெரிவித்த முதல்-மந்திரி குமாரசாமி, நிழல் உலக தாதா ரவி பூஜாரி கைது செய்யப்பட்டு இருப்பதில் கூட்டணி அரசின் பங்கு முக்கியமானது என்றும், மாநிலத்தில் கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்பு எடுக்கப்பட்ட நடவடிக்கையால் ரவி பூஜாரி கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறி இருந்தார்.
முதல்-மந்திரி குமாரசாமியின் பேச்சுக்கு பா.ஜனதா பதிலடி கொடுத்து டுவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக கர்நாடக பா.ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
அண்ணா, குமாரண்ணா(குமாரசாமி) நிழல் உலக தாதா ரவி பூஜாரி ஆப்பிரிக்க நாட்டில் கைது செய்யப்பட்டு இருப்பதற்கு கூட்டணி அரசின் பங்கு முக்கியமானது என்று கூறி உள்ளீர்கள். ரவி பூஜாரி கைது விவகாரத்தை நீங்களே கூறி, உங்களுக்குள் பெருமைப்பட்டு கொள்கிறீர்கள். ஒசபேட்டே தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ஆனந்த்சிங்கை, அதே கட்சியின் கம்பிளி எம்.எல்.ஏ.வான கணேஷ் தாக்கி விட்டு தலைமறைவாக உள்ளார். கணேஷ் எம்.எல்.ஏ.வை கைது செய்யாதது ஏன்?. அவரை கைது செய்வதில் ஆர்வம் காட்டுங்கள்.
இவ்வாறு டுவிட்டரில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்-மந்திரி குமாரசாமி, கணேஷ் எம்.எல்.ஏ.வை கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்), பா.ஜனதா என எந்த கட்சி எம்.எல்.ஏ.வையும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை, என்றார்.