Breaking-News

ஒரே நாளில் 2 முறை குறைந்த தங்கம் விலை.!

தங்கம் விலை இன்று 2-வது முறையாக அதிரடியாக சரிந்துள்ளது.

சென்னை,

தங்கம், வெள்ளி விலையில் சமீபகாலமாக ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வந்தது. இதற்கிடையே நேற்று முன்தினம் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தி மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டது.

இதன் காரணமாக நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,360 அதிரடியாக உயர்ந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400-ம், கிராமுக்கு ரூ.50-ம் உயர்ந்து ஒரு சவரன், ரூ.1,20,400-க்கும், ஒரு கிராம் ரூ.15,050-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதற்கிடையே இன்று தங்கம் விலை குறைந்தது. சென்னையில் இன்று காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் 1,19,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.14,950-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையிலும் சரிவை சந்தித்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று மாலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,480 குறைந்து, ஒரு சவரன் 1,18,120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.185 குறைந்து ஒரு கிராம் ரூ.14,765-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்று ஒரு நாள் மட்டும் மொத்தமாக சவரனுக்கு 2,280-ம், கிராமுக்கு 285-ம் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை காலையில் கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் குறைந்த நிலையில், மாலையில் விலை மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.305-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.