சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் மார்பக புற்றுநோயை கண்டறியும் வகையில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய முப்பரிமாண டிஜிட்டல் மேமோகிராம் கருவியுடன் கடந்த 2018-ம் ஆண்டு முதல் மார்பக பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது.இந்தநிலையில் இன்று (1-ந்தேதி) முதல் 31-ந்தேதி வரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் மார்பக பரிசோதனை முகாம் நடக்க இருக்கிறது. இந்த முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:-
40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பக பரிசோதனை என்பது மிக மிக அவசியம். இந்த பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் ஆரம்ப காலத்திலேயே மார்பக புற்றுநோய் பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை பெற முடியும்.அந்தவகையில் இன்று முதல் ஒரு மாதத்துக்கு இங்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். முகாமில் கலந்து கொள்பவர்கள், முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம். காப்பீட்டு திட்டம் இல்லாதவர்கள் ரூ.1000 கட்டணம் செலுத்தி பரிசோதனை செய்து கொள்ளலாம். மேலும் பரிசோதனைக்கு 7305877472 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.