செய்திகள்

சாதிவாரி கணக்கெடுப்பு: சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

சாதிவாரி கணக்கெடுப்பு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பீகார் மாநிலத்தில் 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானம் அம்மாநில சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. சமூகநீதியை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு மாநிலங்களில் எழுந்து வருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

இந்தியாவில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டுக்கு எதிராக ஏராளமான வழக்குகள் நீதிமன்றங்களில் உள்ளன. ஒவ்வொரு பிரிவுக்கும் வழங்கப்படும் இடஒதுக்கீட்டுக்கு இணையான விகிதத்தில் அப்பிரிவினரின் மக்கள்தொகை இருப்பதை நிரூபிக்காவிட்டால், அப்பிரிவுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் ஆபத்து உள்ளது. இந்த அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது மட்டும்தான். அதனால்தான் அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 40 ஆண்டுகளாக போராடி வருகிறேன்.

பிரதமர் நரேந்திரமோடி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளோம். இக்கோரிக்கையை வலியுறுத்தி மிகப்பெரிய அளவில் போராட்டத்தையும் பா.ம.க. நடத்தியது. எனவே, கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்து தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தேவைப்பட்டால் 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்துவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்