செய்திகள்

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.

பென்னாகரம்,

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை முதல் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,300 கனஅடியாக அதிகரித்தது.

இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டியது. தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வள அதிகாரிகள் தண்ணீர் வரத்தை அளந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோடை விடுமுறையையொட்டி நேற்று ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் குளித்தும், பாதுகாப்பு உடை அணிந்து பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் தொங்கு பாலம், நடைபாதை, முதலை பண்ணை, மீன் அருங்காட்சியகம், பார்வை கோபுரம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். கூட்டம் அதிக அளவில் இருந்ததால் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.