தஞ்சாவூர்,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தின்போது காவிரி நீரை கொண்டு வருவதற்காக சட்டப்போராட்டம் நடத்தி களைத்து போய் விட்டோம். மாற்று ஏற்பாடுகளின் மூலம் பாசன நீர் கிடைக்க செய்ய முயன்று வருகிறோம். அந்த மாற்று ஏற்பாடுகளில் ஒன்று கோதாவரி தண்ணீரை கொண்டு வருவது. இன்னொன்று ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டுவது என்று கூறி இருக்கிறார்.
ஒருபக்கம் காவிரி உரிமையை மீட்டது அ.தி.மு.க. தான் என்று கூறும் முதல்-அமைச்சர், காவிரியை நம்பி பயனில்லை என்று இப்படி பேசி இருக்கிறார். இது தமிழ்நாடு உரிமையை காவு கொடுப்பது போல் உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புபடி கிடைக்க வேண்டிய காவிரி நீரை கொண்டுவர முடியாத முதல்-அமைச்சர் கோதாவரி தண்ணீரை மட்டும் எப்படி கொண்டு வருவார்?.
அ.தி.மு.க.- தி.மு.க. தேர்தல் அறிக்கைகளில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நீரை கர்நாடகத்திடம் இருந்து பெறுவோம் என்று வாக்குறுதி கொடுக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி முழு நேர பணி உள்ளவர்களை கொண்ட அமைப்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஒப்புக்கு காவிரி ஆணையம் அமைத்திருக்கிறது. அது செயல்படவே இல்லை. 2018 டிசம்பரில் இருந்து மாதந்தோறும் திறந்து விட வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறக்கவில்லை. தமிழகத்திற்கு உரிய தண்ணீர் வர காவிரி ஆணையத்தை செயல்பட வைத்திட அ.தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இந்த தேர்தல் பரப்புரையில் காவிரி நீர் பெற்றுத்தருவதை முக்கிய பரப்புரையாக செய்யவில்லை. கர்நாடகத்தின் பொல்லாப்பு வேண்டாம் என்று உள்நோக்கத்தோடு ஒதுங்கி கொண்டதாகவே தெரிகிறது. எனவே இந்த தேர்தல் திருவிழாவில் காவிரி உரிமை குறித்து இந்த கட்சிகள் பேசாததை கண்டிக்க வேண்டும். போராட முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.