புதுடெல்லி,
சீனாவில் தோன்று உலகம் முழுவதும் பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க, பல்வேறு நாடுகளில் உள்ள மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை கொரோனாவிற்கு நேரடியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், பாபா ராம்தேவுடன் தொடர்புடைய பதஞ்சலி நிறுவனம் கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக கூறி சந்தையில் விற்பனையைத் தொடங்கி இருக்கிறது. மேலும் இந்த மருந்து ஏழு நாட்களுக்குள் கொரோனாவை 100% குணப்படுத்திவிடும் என்றும் விளம்பரப்படுத்த தொடங்கியுள்ளது.
இந்த மருந்து பற்றிய ஆய்வு டெல்லி, அகமதாபாத் எனப் பல நகரங்களில் நடந்ததாகவும், மொத்தம் 280 நோயாளிகள் சோதிக்கப்பட்டதில் 100 சதவீதம் குணமடைந்துள்ளனர் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸையும் அதன் சிக்கல்களையும் இதனால் கட்டுப்படுத்த முடிந்தது பாபா ராம்தேவ் கூறினார்.
இந்நிலையில் இது தொடர்பாக மத்திய அரசு இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் கொரோனா வைரஸ் நோய்க்கான மருந்து குறித்து விளம்பரப்படுத்துவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மருந்து குறித்த அனைத்து விவரங்களையும் சமர்பிக்க வேண்டும் என பதஞ்சலி நிறுவனத்திற்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.