குடியாத்தம்,
குடியாத்தத்தை அடுத்த வீரிசெட்டிபல்லி ஊராட்சி வீ.மோட்டூர் கிராமத்தில் காளை விடும் திருவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள குடியாத்தம், பரதராமி, கே.வி.குப்பம், ஆம்பூர், பேரணாம்பட்டு, வாணியம்பாடி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. காளைவிடும் வீதியின் இருபக்கமும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டிருந்தன. காளைவிடும் திருவிழா தொடங்குவதற்கு முன்பாக கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்து அனுமதித்தனர்.
காளைவிடும் திருவிழாவை தாசில்தார் பி.எஸ்.கோபி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. இளைஞர்களின் ஆரவாரத்தில் காளைகள் மிரண்டு தெருவில் அங்கும் இங்குமாக ஓடின. சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
காளைவிடும் திருவிழாவை காண குடியாத்தம், கே.வி.குப்பம், பரதராமி சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டிருந்தனர். வருவாய் ஆய்வாளர் சிவசங்கரன், கிராம நிர்வாக அலுவலர் ஜீவரத்தினம் மற்றும் வருவாய்த்துறையினர் விழாவை கண்காணித்தனர்.
விழாவையொட்டி கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில், 25-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஏற்பாடுகளை வீ.மோட்டூர் மற்றும் வீ.மத்தூர் கிராமமக்கள், விழாக்குழுவினர், நேரு இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.