வடமதுரை,
கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 67 துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 17 ஆரம்ப சுகாதார நிலையங்களில் முன்னோடி திட்டமாக அனைவருக்கும் நலவாழ்வு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு துணை சுகாதார நிலையத்திற்கும் கூடுதலாக ஒரு கிராம சுகாதார செவிலியர் பணியமர்த்தப்பட்டு 24 மணிநேரமும் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் இத்திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அய்யலூர் மற்றும் கொடைரோடு அருகே உள்ள சக்கையநாயக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நலவாழ்வு மையம் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அய்யலூரில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி நலவாழ்வு மையத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் 10 ஆயிரத்து 500 நலவாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்படும். இதனால் கிராமப்புற மக்களும், குழந்தைகளும் பலனடைய முடியும். மத்திய அரசு ஆயுஷ்மான்பாரத் என்ற காப்பீட்டு திட்டத்தை இந்தியா முழுவதும் தொடங்கியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 1 கோடியே 47 லட்சம் குடும்பங்கள் பயனடையும். இந்த திட்டத்திற்கான பிரீமியம் தொகையில் 60 சதவீதம் மத்திய அரசும், 40 சதவீதம் மாநில அரசும் செலுத்தும். இந்த திட்டத்தின் மூலம் ஆண்டு ஒன்றுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 லட்ச ரூபாய் வரை ஏற்படும் மருத்துவ செலவுகளை இந்திய அரசே ஏற்கும். இதனால் மருத்துவ செலவிற்கு பணம் இல்லை என எந்த குடும்பத்தினரும் வீட்டில் முடங்கி கிடக்கவேண்டிய அவசியம் இல்லை. உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் பொதுமக்கள் சேர்ந்து பயன் அடையலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் அரசியல் தொடர்பாக கேள்விகள் கேட்டனர். ஆனால் அவர் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.
கொடைரோடு அருகேயுள்ள சக்கையநாயக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நல வாழ்வு மையம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் மையத்தை குத்து விளக்கு ஏற்றி வைத்தும் ரிப்பன் வெட்டியும் திறந்து வைத்து பேசினார். தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல் எம்.பி. உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள், திண்டுக்கல் சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெயவீரபாண்டியன் வரவேற்றார். விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.
வேடசந்தூர் எம்.எல்.ஏ. வி.பி.பி.பரமசிவம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம், அய்யலூர் பேரூராட்சி செயல் அலுவலர் முகமது யூசுப், மருத்துவ அலுவலர் காவியா, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் லட்சுமணன், நகர செயலாளர்கள் மணி, பாலசுப்பிரமணி, திண்டுக்கல் மாநகராட்சி முன்னாள் மேயர் மருதராஜ், நிலக்கோட்டை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் யாகப்பன், மற்றும் மருத்துவ அதிகாரிகள், பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.