மும்பை,
மராட்டியத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மாணவர்களின் நலன் கருதி 10-ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக அரசு 10-ம் வகுப்பு தேர்வை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் தேர்வு ரத்து குறித்து கல்வி மந்திரி வர்ஷா கெய்க்வாட் கூறியதாவது:-
மாநிலத்தில் நிலவும் மோசமான நிலையை கருத்தில் கொண்டு, அரசு 10-ம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. மாணவர்கள், ஆசிரியர்களின் நலம், பாதுகாப்பதே எங்களுக்கு முக்கியம். தற்போது உள்ள சூழல் தேர்வு நடத்த ஏதுவாக இல்லை. எந்த அடிப்படையில், எப்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்பது விரைவில் அறிவிக்கப்படும். மாணவர்களின் மதிப்பெண்களை நியாயமாகவும், சரியாகவும் மதிப்பிடுவது குறித்து மாநில பள்ளிகல்வித்துறையினர் பணியாற்றி வருகின்றனர்.
12-ம் வகுப்பு பொது தேர்வு மே மாத இறுதியில் நடக்கும் என அறிவித்து இருந்தோம். அந்த அறிவிப்பு தொடருகிறது. மாநிலத்தில் நிலவும் சுகாதார மற்றும் பாதுகாப்பு சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே சி.பி.எஸ்.சி. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.