மும்பை,
இந்த மாநகராட்சியின் பதவிக்காலம் மார்ச் மாத தொடக்கத்தில் முடிகிறது. இதையடுத்து பிப்ரவரி 21-ந் தேதி (நேற்று) மும்பை மாநகராட்சி தேர்தல் நடைபெறும் என கடந்த மாதம் மாநில தேர்தல் கமிஷன் அறிவித்தது.
தற்போது மும்பை மாநகராட்சி சிவசேனா வசம் உள்ளது. இந்த கட்சியே கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மும்பை மாநகராட்சியில் ஆதிக்கம் செலுத்தி அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறது.
மும்பை மாநகராட்சி தேர்தலில் வழக்கமாக சிவசேனாவுடன் பாரதீய ஜனதா கூட்டணி வைத்து போட்டியிடும். இந்த தடவை அந்த இரு கட்சிகளின் கூட்டணி முறிந்தது. இதேபோல நீண்டகால நண்பர்களான காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும் முறிந்தது.
அனல் பறந்த பிரசாரம்
இதையடுத்து 4 பெரிய கட்சிகளும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தன. மண்ணின் மைந்தர்கள் என்று தங்களை பறைசாற்றிக்கொள்ளும் ராஜ்தாக்கரேயும் தனியாக களத்தில் குதித்தார். இதன் காரணமாக தேர்தல் களம் சூடு பிடித்தது. வேட்பாளர்கள் மட்டுமின்றி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மத்திய, மாநில மந்திரிகள், நடிகர், நடிகைகளும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
மும்பையில் மொத்தம் 227 வார்டுகள் உள்ளன. இதில், 2 ஆயிரத்து 271 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
7,304 வாக்குச்சாவடி
பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டன. பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக நகர் முழுவதும் 1,582 இடங்களில் 7 ஆயிரத்து 304 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்தல் பணியில் 42 ஆயிரத்து 797 பணியாளர்கள் ஈடுபட்டனர். பதற்றமான வார்டுகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காலை 7.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை நேரத்தில் வாக்குப்பதிவு சற்று மந்தமாகவே இருந்தது. நேரம் ஆக, ஆக பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களிக்க தொடங்கினர். குறிப்பாக காலை 10 முதல் 1 மணிக்குட்பட்ட நேரத்தில் வாக்குப்பதிவு மும்முரமாக நடந்ததை காண முடிந்தது. நடக்க இயலாத முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் வாக்குச்சாவடிகளுக்கு வந்து உற்சாகமாக ஓட்டுப்போட்டனர்.
கவர்னர் ராம் நாயக்
உத்தர பிரதேச கவர்னர் ராம் நாயக், கோரேகாவ் 51-வது வார்டில் வாக்களித்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் மும்பை 214-வது வார்டு பகுதியில் தனது மருமகன், பேத்தியுடன் வந்து வாக்களித்தார். சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே குடும்பத்தினருடன் வந்து பாந்திரா கலாநகர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். நவநிர்மாண்சேனா தலைவர் ராஜ்தாக்கரே சிவாஜிபார்க் பகுதியில் குடும்பத்தினருடன் வந்து ஓட்டுப்போட்டார்.
இதேபோல நடிகர் ஜான் ஆபிரகாம், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் மற்றும் மத்திய- மாநில மந்திரிகள், அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்களும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
55 சதவீதம் வாக்குப்பதிவு
மாலையில் வாக்குப்பதிவு முடிந்ததை தொடர்ந்து, 55 சதவீதம் ஓட்டுகள் பதிவானதாக மாநில தேர்தல் கமிஷன் அறிவித்தது. கடந்த தேர்தலில் (2012) 44.75 சதவீதம் மட்டுமே வாக்குப்பதிவு ஆனது. எனவே இந்த தடவை 10.25 சதவீதம் வாக்குகள் அதிகமாக பதிவாகி இருப்பது சாதனையாக கருதப்படுகிறது.
வாக்குசதவீதம் அதிகரித்ததற்கு கல்லூரி மாணவர்கள் நடத்திய விழிப்புணர்வு தெருக்கூத்துகள், பேரணி முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
நாளை வாக்கு எண்ணிக்கை
வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன. பின்னர் அவை பலத்த பாதுகாப்புடன் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தாதர் ருபரேல் கல்லூரி உள்பட அனைத்து இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவை ஒட்டுமொத்த மராட்டியமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
மேலும் 9 மாநகராட்சிகள்
இதேபோல், மும்பை மாநகராட்சியுடன் மேலும் 9 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் அதிகப்பட்சமாக பிம்ரி சிஞ்ச்வாட்டில் 67 சதவீதமும், குறைந்தபட்சம் உல்லாஸ் நகரில் 45 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
இதுதவிர 11 மாவட்ட பஞ்சாயத்துகள், 118 பஞ்சாயத்து சமிதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இந்த அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் மொத்தம் 69.49 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. குறிப்பாக ராய்காட் மாவட்ட பஞ்சாயத்தில் 71 சதவீதம், ரத்னகிரி- 64 சதவீதம், சிந்துதுர்க்- 70 சதவீதம், நாசிக்- 68 சதவீதம், புனே- 70 சதவீதம், சத்தாரா- 70 சதவீதம், சாங்கிலி -65 சதவீதம், சோலாப்பூர்- 68 சதவீதம், கோலாப்பூர் - 70 சதவீதம், அமராவதி - 67 சதவீதம், கட்சிரோலி - 68 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இங்கும் நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
அமைதியாக முடிந்தது
சிறு பிரச்சினைகளை தவிர்த்து அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடந்ததாக மாநில தேர்தல் கமிஷன் தெரிவித்தது.