மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத 11 கடைகளுக்கு அபராதம்

கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத 11 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஜெயங்கொண்டம்:

கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் அடங்கிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டபோதிலும் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதாகவும், சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதற்கிடையே ஜெயங்கொண்டம் நகராட்சி மற்றும் காவல்துறை, வருவாய்த்துறை சார்பில் தினமும் ஆய்வு செய்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயங்கொண்டத்தில் நேற்று துணை தாசில்தார் விமலா தலைமையில் நகராட்சி வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி, தூய்மை பணி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் கடைவீதியில் வீதி, வீதியாக சென்று சோதனை செய்தனர். அப்போது சமூக இடைவெளியை பின்பற்றாமல் கொரோனா விதிமுறைகள் மீறிய காய்கறி கடைகள் உள்ளிட்ட 6 வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.3,500 அபராதம் விதித்தனர். இதேபோல் வருவாய்த்துறை சார்பில் நடத்திய சோதனையில் விதிமுறைகளை பின்பற்றாத 5 கடைகளுக்கு ரூ.2,500 அபராதம் விதித்தனர். இதன்படி ஒரே நாளில் மொத்தம் 11 கடைகளுக்கு ரூ.5,500 அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும் விதிமுறைகளைப் பின்பற்றாத வணிக நிறுவனங்களை பூட்டி சீல் வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர். பின்னர் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் வாகனங்களை நிறுத்தி இ-பதிவு உள்ளதா? என்பது குறித்தும் சோதனை செய்தனர். ஆய்வின்போது வருவாய் உதவியாளர் சரஸ்வதி, ஜெயங்கொண்டம் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.