மாவட்ட செய்திகள்

144 தடை உத்தரவு எதிரொலி: நீண்ட வரிசையில் நின்று மதுவகைகளை வாங்கிய ‘குடிமகன்’கள்

144 தடை உத்தரவு எதிரொலியால் டாஸ்மாக் கடைகளில் நீண்ட வரிசையில் நின்று மதுவகைகளை ‘குடிமகன்’கள் வாங்கிச் சென்றனர். கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டது.

வேலூர்,

உலக நாடுகளை கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிறது கொரோனாவைரஸ். இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. எனினும் அரசையும், மக்களின் மனதையும் தன் பிடியில் வைத்து ஆட்டிக்கொண்டிருக்கிறது கொரோனா.

இதை கட்டுப்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோளுக்கு இணங்க கடந்த 22-ந் தேதி இந்தியா முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. அதில் அனைத்து மக்களின் ஆதரவு வெளிப்பட்டது. எனினும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. வேகமாக பரவி வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

எனவே இந்த வைரசை கட்டுப்படுத்தும் விதத்தில் தமிழக அரசு நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவில் ஏப்ரல் 1-ந் தேதி காலை வரை நீடிக்கிறது. இதையொட்டி பஸ், கார், ஆட்டாக்கள் ஓட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வணிக நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலயில் நேற்று டாஸ்மாக் கடை திறந்தவுடன் குடிமகன்கள் அனைவரும் டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்தனர். மது பழக்கத்தை கைவிட முடியாத காரணத்தினால் அவர்கள் பலர் ஒரு வாரத்துக்கு தேவையான மதுவகைகளை வாங்கிக் குவித்தனர்.

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகம் வேலூர், அரக்கோணம் என இரு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இரு மண்டலங்களையும் சேர்த்து 198 கடைகள் உள்ளது. இந்த டாஸ்மாக்கடைகள் அனைத்திலும், மதுபிரியர்கள் நேற்று பழத்தில் ஈக்கள் மொய்ப்பது போல் மொய்த்தனர். இடைவெளி விட்டு தான் மது வாங்க வேண்டும் என்ற உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டது.

மது கிடைத்தால் போதும் என்ற வெறியில் சில கடைகளில் குடிமகன்கள் முண்டியடித்துக் கொண்டு மது வகைகளை வாங்கிச் சென்றதை காணமுடிந்தது. ரேஷன் கடைகளில் நீண்டவரிசையில் நின்று பொருட்கள் வாங்குவது போன்று அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் நீண்டவரிசையில் மதுபிரியர்கள் காத்திருந்தனர். மாலை 6 மணி ஆனதும் கடைகளை அதன் விற்பனையாளர்கள் மூடினர். பின்னர் கடை களுக்கு சீல் வைக்கப்பட்டது. இதனால் மதுகிடைக்காமல் பலர் ஏமாற்றத்துடனும், ஏக்கத்துடனும் கடையை பார்த்தவாறே சென்றனர்.

இந்த 144 உத்தரவையொட்டி நேற்று ஒருங்கிணந்த மாவட்டத்தில் மதுவிற்பனை களை கட்டியது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...