திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் கனமழையினால் 17 ஆயிரம் எக்டேர் சம்பா, தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.
அமைச்சர் குழுவினர்
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக சம்பா, தாளடி பயிர்கள் நீரில் முழ்கியது. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து டெல்டா மாவட்டங்களில் மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களை காப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும், பயிர் சேத விவரங்களை அறியவும் அமைச்சர் அடங்கிய குழுவினை நியமித்து ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்படி கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எஸ்.ரகுபதி, கே.ஆர்.பெரியகருப்பன், சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் ஆகியோர் அடங்கிய குழு நேற்று திருவாரூர் மாவட்டத்திற்கு வந்தது.
பார்வையிட்டனர்
திருவாரூர் அருகே பாரதி மூலங்குடி, கண்கொடுத்த வணிதம் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் விதைப்பு செய்த பயிர்கள் நீரில் முழ்கி பாதிக்கப்பட்டிருப்பதையும், சேதமடைந்த பயிர்களை அமைச்சர்கள் அடங்கிய குழுவினர் பார்வையிட்டனர். அப்போது பயிர்கள் பாதிப்பு குறித்து முழுமையாக கணக்கெடுப்பு செய்திட வேளாண்மை அதிகாரி உத்தரவிட்டார். மேலும் பயிர் காப்பீடு செய்ய வருகிற 15-ந் தேதி கடைசி நாள் என்பதால் உடனடியாக காப்பீடு செய்திட விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து காவணூர் பகுதியில் 30 ஏக்கர் பரப்பளவில் முற்றிலும் மழை நீரில் முழ்கிய பயிர்களை பார்வையிட்டு, பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர். வயல்களில் தேங்கிய மழைநீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
பேட்டி
பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கன மழையினால் திருவாரூர் மாவட்டத்தில் பயிர்கள் சேதம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்திடவும், பாதிக்கப்பட்ட பயிர்களை காப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கவும் அமைச்சர்கள் அடங்கிய குழுவை முதல்-அமைச்சர் அனுப்பி வைத்துள்ளார். இந்த குழுவானது திருவாரூர் மாவட்டத்தில் குக்கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்து, விவசாயிகளின் குறைகள் குறித்து கேட்டறிந்தோம்.
17 ஆயிரம் எக்டேர் பயிர்கள் பாதிப்பு
திருவாரூர் மாவட்டத்தில் கனமழையினால் 17 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சம்பா, தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் சம்பாவை விட தாளடி பயிர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயிர்கள் சேதம் குறித்தும், பயிர் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் உரங்கள் வழங்கவும் அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பயிர் காப்பீடு செய்ய அவகாசம் நீட்டிப்பு செய்ய வேண்டும் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளோம்.
நிவாரணம் வழங்கப்படும்
ஆனாலும் வருகிற 15-ந்தேதிக்குள் அனைத்து விவசாயிகளும் முழுமையாக பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். இன்று (நேற்று) முதல் கூட்டுறவு சங்கங்களுக்கு விடுமுறை என்பது கிடையாது. ஞாயிற்றுக்கிழமை கூட முழுமையாக செயல்பட உத்தரவிட்டப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி தங்களது பயிரை காப்பீடு செய்து கொள்ள வேண்டும். பயிர் காப்பீடு மூலமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைத்திடும். அதுமட்டுமின்றி அரசின் நிவாரணம் வழங்கப்படும்.
ஆய்வு அறிக்கை
மழையினால் உயிரிழந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்கப்படும். சேதங்களுக்கு ஏற்ப உரிய நிவாரணம் அரசு நிச்சயம் வழங்கும். டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதம் குறித்த ஆய்வு அறிக்கையை அமைச்சர்கள் குழு முதல்-அமைச்சரிடம் அளித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
அப்போது தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கிர்லோஷ்குமார், வேளாண்மை துறை இயக்குனர் அண்ணாதுரை, மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், செல்வராசு எம்.பி., பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், கொரடாச்சேரி ஒன்றிய துணைத்தலைவர் பாலசந்திரன், முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், வேளாண்மை இணை இயக்குனர் சிவகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிர்மலா ஆகியோர் உடனிருந்தனர்.
இன்று முதல்-அமைச்சர் ஆய்வு
தொடர்ந்து அமைச்சர் ஐ. பெரியசாமி கூறுகையில்,
தமிழகத்தில் கடந்த 8 நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், அதன் பாதிப்புகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, நிவாரண நடவடிக்கைகளை துரிமாக மேற்கொண்டு வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக டெல்டா மாவட்டங்களில் மழை பாதிப்புகளை இன்று(சனிக்கிழமை) முதல்-அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றார்.
கோரிக்கை மனு பெற்றனர்
முன்னதாக மன்னார்குடியை அடுத்த உள்ளிக்கோட்டை பகுதிக்கு அமைச்சர்கள் குழுவினர் வந்தனர். அப்போது விவசாயிகள் அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர். அப்போது டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர். விவசாயிகளின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட பின்னர் அமைச்சர்கள் குழுவினர் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்றனர்.