சென்னை,
சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் கணேசன் என்ற ராம கணேசன். இவர் ரியல் எஸ்டேட் தரகராக தொழில் செய்து வந்தார். சென்னை புறநகர் பகுதிகளான ஈஞ்சம்பாக்கம், செம்மஞ்சேரி மற்றும் ஊரப்பாக்கம் ஆகிய இடங்களில் காலியாக கிடக்கும் வீட்டு மனைகளை போலியான ஆவணங்கள் மூலம் விற்பனை செய்வதாக இவர் மீது புகார்கள் வந்தது. ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள 3 வீட்டு மனைகளை போலியான ஆவணங்களை காட்டி ரூ.9 கோடிக்கு விலைபேசி, சென்னை மேற்கு சி.ஐ.டி. நகரைச்சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் ரூ.1.90 கோடி முன்பணமாக வாங்கி மோசடி செய்து விட்டதாக, கணேசன் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது.
ரியல் எஸ்டேட் தரகர் கைது
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் தேன்மொழி மேற்பார்வையில், உதவி கமிஷனர் ஜான்விக்டர், இன்ஸ்பெக்டர் மேனகா ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார், கணேசன் மீதான புகார் பற்றி விசாரணை நடத்தினார்கள். உரிய வழக்கும் பதிவு செய்யப்பட்டது. போலீஸ் கையில் சிக்காமல் இருந்த ரியல் எஸ்டேட் தரகர் கணேசன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.