கோவை,
கோவையில் உள்ள விமான நிலையத்துக்கு இலங்கை, சிங்கப்பூர், சார்ஜா ஆகிய நாடுகளில் இருந்தும், உள்நாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான விமானங்கள் வந்து செல்கின்றன.
வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வரும் பயணிகள் தங்கம் உள்பட விலை உயர்ந்த பொருட்களை கடத்தி வருகிறார்களா? என்பது குறித்து மத்திய வருவாய் புலனாய்வு மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சார்ஜாவில் இருந்து கோவைக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணியளவில் சார்ஜாவில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து அதிகாரிகள் சோதனை செய்தனர். விசாரணையில், அவர்களது பெயர் முகமது யாசீர் (வயது34), இர்பான் (35) என்பது தெரிய வந்தது.
இதில் முகமதுயாசீர் 297.320 கிராம் தங்கத்தை பொடியாக்கி பசையுடன் கலந்து நூதன முறையில் தனது ஆசன வாயில் வைத்து கடத்தியது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.13 லட்சத்து 78 ஆயிரத்து 376 ஆகும். இதையடுத்து அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது போல் இர்பான், 296.740 கிராம் தங்கத்தை தூளாக்கி பசையுடன் கலந்து ஆசன வாயில் வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.13 லட்சத்து 75 ஆயிரத்து 687 ஆகும். அந்த தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.27 லட்சத்து 54 ஆயிரத்து 63 என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து முகமது யாசீர், இர்பான் ஆகிய 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.