மாவட்ட செய்திகள்

அரூர் அருகே வாணியாற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

வாணியாற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

அரூர்:

அரூர் அருகே வாணியாற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிறுவர்கள்

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கைலாயபுரம் இருளர் காலனியை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மகன் மாதேஷ் (வயது 13).

இதே பகுதியை சேர்ந்த காளியப்பன் என்பவரின் மகன் வெற்றிவேல் (8). இவர்கள் 2 பேரும் உறவினர்கள். அந்த பகுதியிலுள்ள அரசு பள்ளியில் முறையே 7-ம் வகுப்பு மற்றும் 3-ம் வகுப்பு படித்து வந்தனர்.

ஆற்றில் மூழ்கி பலி

இந்த 2 சிறுவர்களும் நேற்று மாலை அந்த பகுதியை சேர்ந்த காளியப்பன் என்ற முதியவருடன் கைலாயபுரத்திலிருந்து சட்டையம்பட்டி செல்லும் வழியில் உள்ள வாணியாற்று பகுதிக்கு ஆடு மேய்க்க சென்றனர்.

அப்போது அங்கு ஆற்றில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் இறங்கி குளித்தனர். அப்போது சிறுவர்கள் 2 பேரும் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. நீச்சல் தெரியாத இவர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

போலீசார் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்த மத்தியம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சரிதா அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்று தண்ணீரில் மூழ்கி பலியான மாதேஷ், வெற்றிவேல் ஆகிய 2 பேரின் உடல்களை மீட்டு விசாரணை நடத்தினார்கள்.

அப்போது 2 பேரின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதைத்தொடர்ந்து 2 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.