பவானிசாகர்,
பவானிசாகர் அருகே உள்ள காராச்சிக்கொரை கிராமத்தைச் சேர்ந்தவர் எழில்குமார் (வயது45). விவசாயி. இவரது விவசாய தோட்டம் பவானிசாகர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு அவர் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜி 9 ரக வாழைகளை பயிரிட்டுள்ளார். இந்த வாழை மரங்கள் குலை தள்ளி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து 2 யானைகள் வெளியேறின. பின்னர் இந்த யானைகள் வனப்பகுதியையொட்டி உள்ள எழில்குமாரின் வாழை தோட்டத்துக்குள் புகுந்தன.
அட்டகாசம்
அதைத்தொடர்ந்து யானைகள் வாழை குருத்துக்களை தின்றும், மரங்களை மிதித்தும் நாசம் செய்ய தொடங்கின. மேலும் பிளிறிக்கொண்டும் அட்டகாசத்தில் ஈடுபட்டன. சத்தம் கேட்டு அருகே உள்ள தோட்டத்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த எழில்குமார் திடுக்கிட்டு எழுந்தார். பின்னர் தோட்டத்துக்கு சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம்பக்கத்து விவசாயிகளுக்கு எழில்குமார் தகவல் கொடுத்தார். அதன்பின்னர் அவர்கள் தீப்பந்தங்கள் காட்டியும், தகர டப்பாக்களால் ஒலி எழுப்பியும் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
வாழைகள் நாசம்
ஆனால் யானைகள் அங்கிருந்து செல்லவில்லை. தோட்டத்துக்குள்ளாகவே சுமார் 2 மணி நேரம் அங்கும் இங்கும் சுற்றி திரிந்து வாழைகளை நாசம் செய்தன. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வாழைகள் சேதம் அடைந்தன. அதன்பின்னரே யானைகள் அங்கிருந்து காட்டுக்குள் சென்றன.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, கடந்த ஒரு வார காலமாக யானைகள் தொடர்ந்து விவசாய தோட்டத்தில் நுழைந்து வாழை மரங்களை சேதப்படுத்தி வருகிறது. இதில் 800 வாழைகள் சேதமடைந்துள்ளன. எனவே சேதமடைந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் தடுக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.