மாவட்ட செய்திகள்

2 ஆண்டுகளுக்கு பின்னர் கல்லலில் நடந்த மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை மாவட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கல்லலில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

மாட்டு வண்டி பந்தயம்

கல்லல் ஒன்றிய அ.தி.மு.க.வினர் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயம் கல்லலில் இருந்து ஆலம்பட்டி செல்லும் சாலையில் 15 கி.மீ. தூரம் இலக்காக வைத்து நடைபெற்றது. போட்டியில் பெரிய மாடுகள், சிறிய மாடுகள் என 2 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. பெரிய மாடுகள் பிரிவில் 8 வண்டிகளும், சிறிய மாடுகள் பிரிவில் 6 வண்டிகளும் பங்கேற்றன. முடிவில் வெற்றிபெற்ற மாட்டு வண்டிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயம் உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் தற்போது மாணவர்கள், இளைஞர்களின் போராட்டத்தை அடுத்து அதற்கான தடை நீக்கப்பட்டது. தடை நீக்கப்பட்ட பிறகு கல்லல் பகுதியில் நடைபெற்ற இந்த மாட்டு வண்டி போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

பரிசு

போட்டியின் முடிவில் பெரிய மாடுகள் பிரிவில் முதல் பரிசை கல்லம்பட்டி சின்ன அடைக்கண் என்பவருடைய மாட்டு வண்டியும், 2-வது பரிசை விராமதி சந்திரன் வண்டியும், 3-வது பரிசை ஆட்டுக்குளம் காந்தி வண்டியும் பெற்றது.

இதேபோல் சின்ன மாடுகள் பிரிவில் முதல் பரிசை பாகனேரி மதியாபுரி ஆகாஷ் மற்றும் நெற்புகப்பட்டி சிங்காரம் ஆகியோர் வண்டியும், 2-வது பரிசை சூரத்துப்பட்டி இளவரசு வண்டியும், 3-வது பரிசை சின்னஊர்ச்சேரி சந்தானி வண்டியும் பெற்றது. போட்டிக்கான ஏற்பாடுகளை ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் சண்முகசுந்தரம் செய்திருந்தார்.