திருவள்ளூர்,
கொரோனா வைரஸ் காரண மாக ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வருமானம் இன்றி தவிக்கும் ஏழைகள், வட மாநிலத்தவர்களுக்கு தன்னார்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை மற்றும் திருவூர் ஊராட்சியை சேர்ந்த 25 கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தினருக்கு ஒரு வாரத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் காய்கறி உள்ளிட்டவற்றை தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சார்பாக, தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
செவ்வாப்பேட்டை ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கலந்துகொண்டு, கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் தொகுப்பை வழங்கினார்.
பின்னர் நிருபர்களிடம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறும்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 69 ஆயிரத்து 413 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவித்தொகை ரூ.1000 மற்றும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மாவட்டத்தில் 350-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. கண்காணிப்பு குழுவினர் அந்த பகுதி பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் தாசில்தார் விஜயகுமாரி, செவ்வாப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் டெய்சி ராணி அன்பு, துணைத்தலைவர் சசிகலா கோபிச்சந்திரன், திருவூர் ஊராட்சி மன்ற தலைவர் பழனி, ஒன்றிய கவுன்சிலர்கள் வேதவள்ளி சதீஷ்குமார், நவமணி அபினாஷ், திலீப் ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.