மாவட்ட செய்திகள்

மாநில அளவில் 3-ம் இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் கலெக்டர் வழங்கினார்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் மாநில அளவில் 3-ம் இடம் பிடித்த குமரி மாவட்ட மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.15 ஆயிரத்துக்கான காசோலையை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வழங்கினார்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கம். இதேபோல் திங்கட்கிழமையான நேற்றும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் அலுவலக லூயி பிரெயிலி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி விரைவாக நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

சான்றிதழ்-காசோலை

அப்போது 2015-16-ம் கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3-வது இடம் பெற்ற குமரி மாவட்ட மாணவ-மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் தலா ரூ.15 ஆயிரத்துக்கான காசோலையை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வழங்கினார்.

நெய்யூர் எல்.எம்.எஸ். மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிதா தேவஒய்சி, நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனி இவான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆட்லின், தக்கலை அமலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஸ்லின் பெரில், ஜூலி ட்ரைபோசா, பூஜா, குளுமைக்காடு ஆட்லின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பவுஸ்மி, கார்த்திக், நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிரியதர்ஷினி, குலசேகரம் ஸ்ரீராமகிருஷ்ணா பால வித்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ரிஷ்மிகா, ஆலங்கோடு மதர்தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சிவகுருநாதன், நாகர்கோவில் ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வினிதா ஆகிய 11 மாணவ-மாணவிகளுக்கு பாராட்டுச்சான்றிதழ்கள் மற்றும் காசோலைகள் வழங்கப்பட்டன.

ரூ.1 கோடி கடன்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் காட்டாத்துறை ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு பெருங்கடன் தொகையாக ரூ.1 கோடியே 10 லட்சத்துக்கான காசோலையையும் கலெக்டர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி(பொறுப்பு) எஸ்.பாலா, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.