மாவட்ட செய்திகள்

கொரோனா ஊரடங்கால் சேலம் மாவட்டத்தில் 35 ஆயிரம் லாரிகள் நிறுத்தம்-1 லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தவிப்பு

கொரோனா ஊரடங்கால் சேலம் மாவட்டத்தில் 35 ஆயிரம் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

சேலம்:

கொரோனா ஊரடங்கால் சேலம் மாவட்டத்தில் 35 ஆயிரம் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

லாரிகள் நிறுத்தம்

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக தமிழகத்தில் வருகிற 24-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் லாரிகள் ஓடுகின்றன. ஜவ்வரிசி, சர்க்கரை, கல், மாவு, இரும்பு பொருட்கள், வெல்லம், ஜவுளிகள் உள்ளிட்ட பொருட்கள் வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஊரடங்கையொட்டி மாவட்டத்தில் சுமார் 35 ஆயிரம் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. குறைவான லாரிகள் மட்டும் ரேஷன் பொருட்கள் கொண்டு செல்லுதல் உள்ளிட்டவைகளுக்காக இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் இயக்கப்படாத லாரிகள் செவ்வாய்பேட்டையில் உள்ள லாரி மார்க்கெட், ஆங்காங்கே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் மற்றும் சாலையோரம் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

வருவாய் இழப்பு

கொரோனா ஊரடங்கால் லாரிகள் நிறுத்தப்பட்டதால் சேலம் மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. மேலும் லாரி உரிமையாளர்களுக்கும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது தவிர லாரி டிரைவர்கள், கிளீனர்கள், மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் லாரிகளை பழுது பார்க்கும் பட்டறைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் என சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து, வருமானமின்றி தவித்து வருகின்றனர். எனவே லாரி தொழிலை பாதுகாக்க 6 மாத காலத்துக்கு காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும் என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.