பிரமாண்டம் மற்றும் பிரமிப்பின் உச்சமாக திகழ்ந்து, வசூல் மழையில் உலகளவில் இன்று வரை முதலிடத்தில் இருக்கிறது ஹாலிவுட்டின் அவதார் திரைப்படம். இந்தப் படத்தின் அடுத்தடுத்த பாகங்களுக்கான வெளியீட்டுத் தேதிகளை, இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்திருக்கிறார். அதன்படி அவதாரின் அடுத்த நான்கு பாகங்கள் வெளியாக இருக்கின்றன.
2020ம் ஆண்டு டிசம்பர் 18ந் தேதி அவதார் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகிறது. அதற்கு அடுத்த ஆண்டு டிசம்பர் 17ந் தேதி மூன்றாம் பாகமும், 2024ம் ஆண்டு டிசம்பர் 20ந் தேதி நான்காம் பாகம், அதற்கு அடுத்த ஆண்டு டிசம்பர் 19ந் தேதி ஐந்தாம் பாகம் என தொடர் வெளியீடாக வரஇருக்கிறது அவதார் திரைப்படம்.
2009ம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபீசில் 2.8 பில்லியன் டாலர்களை அள்ளிய அவதார் படத்தின் முதல் பாகத்தை விடவும், இனி வரும் ஒவ்வொரு பாகமும் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அவதார் படத்தின் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இருப்பினும் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனுக்கு திருப்தி இல்லையாம். முதல் பாகத்தை மிஞ்சும் அளவிற்கு தயார் செய்ய வேண்டும் என்பதால், பாதிக்கும் மேற்பட்ட காட்சிகளை நீக்கிவிட்டு, புதிதாக யோசித்து திரைப்படமாக்கி வருகிறார். அதற்கான கிராபிக்ஸ் பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது.