திருவாரூர்:
திருவாரூர் நகரில் அனுமதியின்றி இயங்கி வந்த 6 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
டாஸ்மாக் கடைகள்
திருவாரூர் மாவட்டத்தில் 109 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் 40 கடைகளில் மட்டுமே உரிமம் பெற்ற பார்கள் இயங்கி வருகின்றன.
அரசின் உத்தரவுப்படி உரிமம் இல்லாமல் இயங்கும் பார்கள் கண்டறியப்பட்டு அந்தந்த டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் மூலம் பூட்டி சீல் வைக்கும் பணி மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சக்திபிரேம்சந்தர் தலைமையில் போலீசார் உதவியுடன் டாஸ்மாக் பார்களை பூட்டி சீல் வைக்கும் பணியில் அலுவலர்கள் நேற்று ஈடுபட்டனர்.
சீல் வைப்பு
அதன்படி திருவாரூர் மன்னார்குடி சாலை விளமல் பகுதியில் இயங்கி வரும் 2 டாஸ்மாக் கடைகள் மற்றும் பழைய தஞ்சை சாலை, பழைய பஸ் நிலையம் ரவுண்டானா, கடைத்தெரு ஜுப்ளி மார்க்கெட் மற்றும் மாவூர் பகுதி ஆகிய 6 டாஸ்மாக் கடைகளையொட்டி இயங்கி வந்த உரிமம் இல்லாத பார்கள் நேற்று பூட்டி சீல் வைக்கப்பட்டது.
3 பேர் கைது
விளமல் பகுதியில் இயங்கும் 2 கடைகளின் பார் உரிமையாளர்களான காளிதாஸ் (வயது48) மற்றும் சோமசுந்தரம் (49) மற்றும் பழைய தஞ்சை சாலை பார் உரிமையாளர் முருகேசன் (45) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள 3 டாஸ்மாக் பார் உரிமையாளர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
---