மாவட்ட செய்திகள்

வயதான தம்பதியிடம் கத்திமுனையில் ரூ85 ஆயிரத்தை

வயதான தம்பதியிடம் கத்திமுனையில் ரூ85 ஆயிரத்தை

பெருமாநல்லூர்,

பெருமாநல்லூர் அருகே வீடு புகுந்து வயதான தம்பதியிடம் கத்திமுனையில் ரூ.85 ஆயிரத்தை பறித்துச் சென்ற 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வயதான தம்பதி

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே, காளிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்குசீரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 74). இவரது மனைவி துளசிமணி (69). இருவரும் தங்களுக்கு சொந்தமான 9 ஏக்கர் தென்னந்தோப்பில் உள்ள தனி வீட்டில் வசித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு இருவரும் வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது முகமூடி அணிந்திருந்த 5 மர்ம ஆசாமிகள் வீட்டிற்குள் புகுந்தனர். இதனைக் கண்டு தம்பதியினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்தக் கொள்ளையர்கள் ராமசாமி கழுத்தில் கத்தியை வைத்து, துளசிமணியிடம் பணம், நகையை கேட்டு மிரட்டியுள்ளனர். மேலும் வீட்டின் அறைக்குள் சென்ற கொள்ளையர்கள் அலமாரியில் வைத்திருந்த ரூ.85 ஆயிரத்தை கொள்ளையடித்துக்கொண்டு தப்பி சென்றனர்.

போலீஸ் விசாரணை

இது குறித்து ராமசாமி பெருமாநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முகமூடி கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.

முகமூடி கொள்ளையர்கள் வயதான தம்பதியை கத்திமுனையில் மிரட்டி ரூ.85 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.