மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் வழியாக பவானி ஆறு செல்கிறது. பில்லூர் அணை யில் இருந்து தண்ணீர் திறக்கும்போது ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும்.
இந்த நிலையில் கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் உள்பட 9 பேர் மேட்டுப்பாளையம் வந்தனர்.
பின்னர் அவர்கள் நெல்லித்துறையில் உள்ள படித்துறை பவானி ஆற்றுக்கு குளிக்க வந்தனர். அவர்கள் ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்தனர். அப்போது பவானி ஆற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த 9 பேரும் ஆற்றின் நடுவே உள்ள திட்டுப்பகுதியில் நின்று கொண்டு செய்வது அறியாமல் திகைத்தனர். அத்துடன் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று அலறினார்கள்.
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் இது குறித்து தீயணைப்பு, போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே அவர்கள் நிலைய அதிகாரி பாலசுந்தரம் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள், பரிசல்காரர்கள் உதவியுடன் 9 பேரையும் ஒரு மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.