மாவட்ட செய்திகள்

காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை கர்நாடகத்தில் இன்று முதல் மதுக்கடைகள் திறப்பு - பூஜை நடத்தி தேங்காய் உடைத்த ருசிகரம்

கர்நாடகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் தினமும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறக்கப்படுகிறது. இதனால் பல இடங்களில் மதுபிரியர்கள் மதுக்கடை முன்பு நேற்று மாலை முதலே தவம் கிடந்தனர். 39 நாட்களாக மூடிக்கிடந்த மதுக்கடை திறக்கப்படுவதால் மகிழ்ச்சி அடைந்த மதுபிரியர்கள் பூஜை நடத்தி தேங்காய் உடைத்து வழிபாடு நடத்திய ருசிகர சம்பவமும் அரங்கேறியுள்ளது.

பெங்களூரு,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அன்று முதல் கர்நாடகம் முழுவதும் மதுபானக் கடைகள் மூடப்பட்டு உள்ளன. மது கிடைக்காத விரக்தியில் 20-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டனர்.

இது ஒருபுறம் இருக்க மதுக்கடை உரிமையாளர்களே, சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட சம்பவங்களும் அரங்கேறி வந்தன. மது கிடைக்காமல் திண்டாடிய மது பிரியர்கள் 4 மடங்கு விலை கொடுத்து மது குடித்தும் வந்தனர். அதுபோல் கர்நாடகத்தில் தென்னை மரங்களில் இருந்து இறக்கப்படும் நீரா பானத்திற்கும் கடும் கிராக்கி ஏற்பட்டு வந்தது. இதுதவிர கள்ளச்சாராயம் விற்பனையும் படுஜோராக நடந்து வந்தது.

இதனால் கொரோனா தடுப்பு பணியில் இரவு-பகலாக ஈடுபட்டு வந்த போலீசாருக்கு இந்த பிரச்சினை பெரும் தலைவலியை கொடுத்து வந்தது. மது போதைக்கு அடிமையான பலரும், கர்நாடகத்தில் மதுக்கடைகளை உடனே திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு டுவிட்டர், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் வேண்டுகோளை விடுத்த வண்ணம் இருந்தனர். இதற்கிடையே கர்நாடகத்தில் கொரோனாவின் தீவிரம் குறைந்து வருகிறது.

இன்று முதல் மதுக்கடைகள் திறப்பு

இதனை கருத்தில் கொண்டு கர்நாடக அரசு, தனியார் மொத்த விற்பனை கடைகள் மற்றும் அரசின் சில்லரை விற்பனை மதுக்கடைகளை திறக்க முன்வந்துள்ளது. அதாவது மே 4-ந்தேதி (இன்று) முதல் கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களை தவிர்த்து மற்ற பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) முதல் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளது.

கடந்த 39 நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டு கிடந்ததால் விரக்தியில் இருந்து வந்த மது பிரியர்கள் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுக்கடைகளில் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையிலும், வரிசையில் நின்று மது வாங்கும் வகையிலும் அனைத்து மதுக்கடைகள் முன்பும் கம்புகளால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க சதுர வடிவிலான கட்டங்களும் சுண்ணாம்பு மூலம் வரையப்பட்டு உள்ளன.

தவம் கிடந்த மதுபிரியர்கள்

இன்று மதுக்கடைகள் திறக்கப்படுவதையொட்டி நேற்று மாலையே பெங்களூரு, கோலார், சாம்ராஜ்நகர், மண்டியா, ராய்ச்சூர், பெலகாவி, யாதகிரி, ஹாவேரி உள்பட ஒரு சில இடங்களில் மதுக்கடைகள் முன்பு ஏராளமானோர் குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் சமூக இடைவெளியுடன் நின்ற படியும், தரையில் அமர்ந்தபடியும் இருந்ததை காண முடிந்தது. மதுவுக்காக மதுக்கடை முன்பு தவம் கிடந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

பெங்களூருவில் வர்த்தக நிறுவனங்கள் அதிகமுள்ள சிக்பேட்டை மார்க்கெட் அருகில் பழைய பேட்டை பகுதியில் உள்ள மதுக்கடை முன்பு இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு முதியவர்கள், இளைஞர்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். அவர்கள் மது வாங்க அங்கு குவிந்திருப்பதாக தகவல் வெளியானது. இதுபற்றி அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது அவர்கள் மது வாங்க வரவில்லை என்றும், அந்த மதுக்கடை அருகில் உள்ள கம்ப்யூட்டர் மையத்தில் வருகிற 17-ந்தேதிக்கு பிறகு ரெயில் டிக்கெட் ஆன்-லைன் முன்பதிவு செய்ய குவிந்ததும் தெரியவந்தது.

பூஜை நடத்தி தேங்காய் உடைத்தனர்

இதற்கிடையே இன்று மதுக்கடை திறக்க உள்ளதால் மகிழ்ச்சியில் திளைத்த சாம்ராஜ்நகர் (மாவட்டம்) டவுனை சேர்ந்த ஒருவர், கர்நாடக அரசின் சில்லரை மதுபானக்கடையான எம்.எஸ்.ஐ.எல். கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் தனது முகத்தை முழுவதுமாக துணியால் மூடியபடி இருந்தார். அவர் தான் கையில் எடுத்து வந்த தேங்காய், பழம், வெற்றிலை, பாக்குகளை மதுக்கடை முன்பு வைத்தார். பின்னர் ஊதுவர்த்தி ஏற்றி சிறப்பு பூஜை செய்தார். பின்னர் தேங்காயை கடை முன்பு உடைத்துவிட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

இதுபோல் கோலார் மாவட்டம் பங்காருப்பேட்டை தாலுகா பூதிக்கோட்டை கிராமத்தில் உள்ள ஒரு மதுக்கடை முன்பு வந்த 45 வயது மதுபிரியர் ஒருவரும் சிறப்பு பூஜை செய்து கற்பூரம் ஏற்றி தேங்காயை உடைத்து வழிபட்டார்.

மைசூருவில் பரபரப்பு

இந்த நிலையில் மைசூருவில் உள்ள அரசு சில்லரை விலை மதுக்கடைகளில் கர்நாடக அரசின் மதுபான கழக அதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்தினர். அவர்கள், மதுபானங்கள் இருப்பு விவரங்களை சரிபார்த்தனர்.

மேலும் காலாவதியான பீர் உள்பட மதுபானங்கள் இருப்பு உள்ளதா எனவும் சோதனையிட்டனர். ஆனால் மதுக்கடை திறந்திருப்பதாக கூறி ஏராளமானோர் மதுவாங்க அங்கு குவிந்தனர். அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கிருந்து கலைந்துபோக செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...