திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், டெங்கு கொசு ஒழிப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். கொசு உற்பத்திக்கு காரணமாக இருப்பவர்கள் மீது வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர்.
அதன்படி நேற்று திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் சுகாதார ஆய்வாளர்கள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அபிராமி அம்மன் கோவில் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியின் பின்புறம் தண்ணீர் தேங்கி கிடந்தது. இதையடுத்து விடுதி உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல, பழனிசாலையில் உள்ள மோட்டார்சைக்கிள் ஒர்க்ஷாப்பிலும் தண்ணீர் தொட்டியில் கொசு புழுக்கள் உற்பத்தியாவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த ஒர்க்ஷாப்புக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்தநிலையில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் நடக்கும் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணிகளை கலெக்டர் டி.ஜி.வினய் திடீரென ஆய்வு செய்தார். கோபால்நகர், சிலுவத்தூர் சாலையில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆய்வில் ஈடுபட்டார். அப்போது மாநகராட்சி கமிஷனர் மனோகர், நகர்நல அலுவலர் அனிதா ஆகியோர் உடன் இருந்தனர்.
இதற்கிடையே, மாவட்ட வருவாய் அலுவலர் (தனி) லதா தலைமையிலான அதிகாரிகள் நேற்று திண்டுக்கல் கரூர் சாலையில் உள்ள கார் ஒர்க்ஷாப்பில் திடீர் சோதனை செய்தனர். அங்கு விபத்துகளில் சேதமடைந்த கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றில், மழைநீர் தேங்கி கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி இருந்தன.
இதேபோல, அங்கு கிடந்த பழைய டயர்களிலும் தண்ணீர் தேங்கியிருந்தது. இதையடுத்து, அந்த கார் ஒர்க்ஷாப்புக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இவை அனைத்தையும் உடனடியாக அகற்றவும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து, நந்தவனப்பட்டியில் குப்பைகளை சாலையில் கொட்டிய 4 கடை உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.