மாவட்ட செய்திகள்

ஒரு தந்தையும்.. 472 மகள்களும்.. - இன்று சர்வதேச தந்தையர் தினம்

பிறந்த தினம், திருமண தினம் மற்றும் சில சிறப்பு தினங்களில் பலரும் உங்களை வாழ்த்தலாம். ஆனால் ‘தந்தையர் தினம்’ என்றால் பிள்ளைகளாகிய ஓரிருவரே உங்களை வாழ்த்த முடியும்.

பிறந்த தினம், திருமண தினம் மற்றும் சில சிறப்பு தினங்களில் பலரும் உங்களை வாழ்த்தலாம். ஆனால் தந்தையர் தினம் என்றால் பிள்ளைகளாகிய ஓரிருவரே உங்களை வாழ்த்த முடியும். ஆனால் அகமதாபாத்தை சேர்ந்த மகேஷ் சவானியை 472 மகள்கள் வாழ்த்துகிறார்கள். ஆம், தந்தையை இழந்த அந்தப் பெண்களுக்கு தந்தையாய் இருந்து திருமணம் நடத்தி வைத்தவர் மகேஷ் சவானி. அதனால் ஒவ்வொரு தந்தையர் தினத்திற்கும் சவானிக்கு வாழ்த்துகள் குவிகின்றன. அன்பு மழையிலும், பரிசு மழையிலும் நனைகிறார் இந்த அன்புத்தந்தை.

வைர வியாபாரம், ரியல்எஸ்டேட் தொழில் ஆகியவைதான் மகேஷ் சவானியின் பிரதான தொழில்கள். சில பள்ளி களையும் பரிபாலனம் செய்கிறார். 48 வயதானவர் சவானி. தொழில் அதிபரான அவரது அண்ணன் சிறிது காலத்திற்கு முன்பு இறந்துவிட்டார். அவரது 2 மகள் களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டிய பொறுப்பு சவானிக்கு ஏற்பட்டது.

திருமண சமயத்தில் அண்ணனின் மனைவி சந்தித்த நெருக்கடியை அவரும் அருகில் இருந்து அறிந்து கொண்டார். வசதி வாய்ப்பு நிறைந்த நாமே, மகள்களின் திருமணத்தை எதிர்கொள்ள இவ்வளவு சிரமப்பட நேரிடும்போது, தந்தையை இழந்து, வசதி வாய்ப்பின்றி தவிக்கும் இளம் பெண்கள் எத்தனைபேர் திருமண பந்தம் கூடாமல் தவிக்கிறார்களோ? என்ற எண்ணம் சவானியின் மனதில் நெருடலை ஏற்படுத்தியது. உடனே தந்தையை இழந்த பெண்கள் மீது தனிக்கவனம் செலுத்துவது என்று முடிவு செய்தார். அதுபோன்ற பெண்களுக்கு ஆதரவு தந்து தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணம் செய்து வைப்பதை தனது தொண்டாக கருதி களத்தில் இறங்கினார். 2008-ம் ஆண்டு முதல் ஏராளமான ஆதரவற்ற பெண்களுக்கு திருமணம் நடத்தி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்து வருகிறார். இதுவரை இவரால் திருமண பந்தம் பெற்றவர்கள் 472 பேர். மேலும் பலருக்கு திருமண உதவித் தொகை வழங்கி உள்ளார்.

சாதி, மதம் பார்க்காமல் ஆதரவற்றோருக்கு அவர் உதவி வருகிறார். அதுபற்றி அவரிடம் கேட்டால் கணவனை இழந்த ஒரு தாய் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க எவ்வளவு சிரமப்படு கிறார் என்பதை நான் அறிவேன் என் கிறார் சவானி.

அவரால் திருமணம் கைகூடிய இளம்பெண்ணான நகீதா பானு, மகிழ்ச்சியில் பூரிக்கிறார். நான் குழந்தையாக இருந்தபோதே எனது தந்தையை இழந்துவிட்டேன். சவானி அப்பா, ஒரு தந்தையைவிட சிறந்தவர். உலகில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் அவரைப்போல ஒரு தந்தை கிடைக்க வேண்டும் என்பதுதான் என் போன்ற பெண்ணின் பிரார்த்தனை என்று நெகிழ்கிறார் அவர். நகீதா பானுவைப் போல இளம் பெண்கள் பலர், மணமேடையில் ஆனந்தக் கண்ணீர் பொங்க அமர்ந்து மாங்கல்ய பாக்கியம் பெற்று, சவானியிடம் ஆசீர்வாதம் பெற்றுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவர் பின்னாலும் ஒவ்வொரு சோகக் கதை உண்டு.

2014-ம் ஆண்டு 111 பேருக்கும், 2016-ம் ஆண்டு 216 பேருக்கும் ஒரே நேரத்தில் திருமணம் நடத்தி அனைவரையும் வியக்க வைத்தார் சவானி. அத்தனை பேருக்கும் இருப்பிடம் ஏற்பாடு செய்து, மணமகள், மணமகன் அலங்காரம் செய்து அழைத்துவந்தபோது திருவிழாக்கோலம் பூண்டதுபோல இருந்தது அந்த இடம்.

மணப்பெண்கள் அத்தனைபேரின் முகத்திலும் மகிழ்ச்சி வெள்ளம். மாங்கல்யம் கழுத்தில் ஏறியபோது அனைவரின் கண்ணோரம் ஆனந்தத் துளிகள். அத்துடன் ஆசீர்வாதம் வாங்கிய சமயம், அனைவருக்கும் சுமார் 4.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி சீர்வரிசை பொருட்கள் வழங்கினார் சவானி. தந்தையை இழந்து திருமணம் நடக்குமா? என்று ஏங்கித் தவித்த அவர்கள், சகல வசதிகளுடன் திருமணமும் நடத்தி, சீர்வரிசையும் வழங்கிய சவானியை தந்தையாகவே கருதத் தொடங்கிவிட்டனர். அவர்கள் தந்தைக்கு ஆற்ற வேண்டிய கடமையாக, தந்தையர் தினத்தை போற்றி கொண்டாடி வருகிறார்கள். அன்றைய தினம் தங்களால் முடிந்த பரிசுப் பொருட்கள், வாழ்த்துகளால் சவானியை திக்குமுக்காடச் செய்துவருகிறார்கள்.

தந்தையை இழந்த பெண்கள் மீது மட்டுமல்ல, போரில் தந்தையை இழந்து தவிக்கும் மாணவர்கள் மீதும் அவரது கரிசனம் விழுந்தது. ஒருமுறை, ஜம்மு காஷ்மீரில் உரி என்ற இடத்தில் தீவிரவாதிகளால் ராணுவ வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர். அப்போது ராணுவ வீரர் ஒருவரது மகள் டி.வி. நிறுவனம் ஒன்றிற்கு கண்ணீர் மல்க பேட்டி அளித்தார். என் தந்தை அதிகமாக என்னிடம் கூறிய வார்த்தை நன்றாகப் படி, அதுவே வெற்றிக்கு வழி வகுக்கும் என்பதுதான். நான் இனி எப்படி படிப்பேன், எனக்குரிய கடமைகளெல்லாம் யார் செய்து வைப்பார்கள் என்று அழுது புலம்பினார். அதைக் கேட்ட சவானி, உரியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த அத்தனை ராணுவ வீரர்களின் குழந்தைகள் படிப்புச் செலவையும் ஏற்பதாக அறிவித்தார். 17 குழந்தைகள் அவரால் கல்வியை இடைவிடாமல் தொடர்கின்றனர்.

மற்றொரு தொண்டாக, உடல் தானம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார் சவானி. இதுவரை 251 பேர் உடல்தானம் செய்ய சம்மதம் தெரிவிக்க உதவியாக இருந்துள்ளார். அவரது தொண்டுகளைப் பாராட்டி பல சமூக அமைப்புகள் விருது வழங்கி கவுரவித்துள்ளன.