மாவட்ட செய்திகள்

திருமணத்துக்கு மறுத்த பெண் என்ஜினீயரை வெட்டி கொல்ல முயற்சி தனியார் நிறுவன ஊழியர் கைது

விருத்தாசலத்தில் திருமணத்துக்கு மறுத்த பெண் என்ஜினீயரை வெட்டி கொல்ல முயன்ற தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம்

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகர் பகுதியை சேர்ந்தவர் அசோகன். இவருடைய மகள் அசோனா(வயது 21). என்ஜினீயரிங் படித்து முடித்துள்ள இவர் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை தனது தோழி ஒருவருடன் உளுந்தூர்பேட்டையில் இருந்து பஸ் மூலம் விருத்தாசலம் பேருந்து நிலையத்திற்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து தான் பணிபுரியும் அலுவலகம் நோக்கி தோழியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.

சரோஜினி நாயுடு தெருவில் நடந்து சென்றபோது, பின்னால் முகத்தை மூடியபடி மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர், திடீரென அசோனாவை வழிமறித்து, தான் வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தை வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்.

அவருடன் வந்த தோழி அதிர்ச்சியில் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என அபயகுரல் எழுப்பினார். இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, அசோனாவை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து அசோனா கொடுத்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அசோனா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளக்குறிச்சி அருகே கொங்கராயப்பாளையத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றபோது, அதேஊரை சேர்ந்த பி.எஸ்சி. பட்டதாரியான விஜய் என்கிற பிரபாகரன்(24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்ய இருவீட்டாரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தநிலையில் விஜயின் நடவடிக்கை சரியில்லை என கூறி அசோனா, அவரை திருமணம் செய்ய மறுத்து விட்டார். பின்னர் அசோனா, விஜயிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த விஜய் செல்போன் மூலம் அசோனாவை பலமுறை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் செல்போன் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் தன்னை ஒதுக்கிய அசோனாவை கொலை செய்ய முடிவு செய்து, அவரை கத்தியால் கழுத்தை வெட்டி கொல்ல முயன்றது தெரியவந்தது.

இதற்கிடையே மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அசோனா உயிருடன் உள்ளாரா? அல்லது இறந்து விட்டாரா? என பார்ப்பதற்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த விஜயை கொளஞ்சியப்பர் கோவில் அருகே வைத்து, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட விஜய், ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...