கோத்தகிரி
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் குட்டியுடன் காட்டு யானை உலா வந்தது.
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை
கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு செல்லும் சாலை அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்கிறது. இதனால் அடிக்கடி காட்டு யானைகள், கரடி, உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.
கோடைக்காலங்களில் குஞ்சப்பனை உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் பலாப்பழ சீசன் நிலவி வருவதால், பலா மரங்களில் உள்ள பழங்களை உண்பதற்காக சமவெளிப் பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் இந்த பகுதியில் முகாமிடுவது வழக்கம்.
இந்த நிலையில் கொரோனா 2-வது அலை பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து சாலைகளும் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.
குட்டியுடன் காட்டு யானை உலா
இதேபோல கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் வெறிச்சோடி உள்ளன. இதன் காரணமாக காட்டு யானைகள் எவ்வித அச்சமுமின்றி சாலைகளில் உலா வருகின்றன. நேற்று முன்தினம் மாலை குஞ்சப்பனையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையின் குறுக்கே குட்டியுடன் யானை ஒன்று உலா வந்தது.
சாலையில் குட்டியுடன் நின்ற யானையை கண்ட வாகன ஓட்டிகள் சிறிது தூரத்திற்கு முன்பாகவே வானங்களை நிறுத்தினர். சிறிது நேரம் அங்கும், இங்குமாக அலைந்த யானை, பின்னர் குட்டியுடன் வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பின்னர் வாகனங்கள் சென்றன.
முழு ஊரடங்கு என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை.காட்டு யானை சாலையில் உலா வந்தபோது, வானங்களில் இருந்த சிலர் அதனை தங்களது செல்போனில் படம் எடுத்தனர். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.