பூந்தமல்லி,
சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கம், வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் நிகிலா (வயது 26). இவர், தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வருகிறார். கடந்த ஆண்டு மாங்காட்டை சேர்ந்த முகமது ஜாபர் அலி என்பவர் வெளிநாட்டில் நர்சு வேலை வாங்கி தருவதாக இவரிடம் கூறினார்.
அதை நம்பிய நிகிலா ரூ.2 லட்சமும், அவரது தோழிக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித்தர வேண்டி ரூ.1 லட்சமும் என மொத்தம் ரூ.3 லட்சத்தை முகமது ஜாபர் அலியிடம் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட அவர், சொன்னபடி வெளிநாட்டில் வேலை வாங்கி தராமல் மோசடி செய்து விட்டதாக போரூர் போலீசில் நிகிலா புகார் அளித்தார்.
அதன்பேரில் போரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் வாங்கி மோசடி செய்தது உறுதியானதால் முகமது ஜாபர் அலியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.