திருவொற்றியூர்,
சென்னையை அடுத்த எண்ணூர் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் அலெக்ஸ், காண்டிராக்டர். இவரது மகன் ஆகாஷ் (வயது 14) பாரதியார் நகரில் உள்ள சகாயமாதா பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். அலெக்ஸ் நேற்று மாலை வெளியூருக்கு சென்றுவிட்டார்.
இதனால் அவரது காரை ஆகாஷ் எடுத்துக்கொண்டு தன்னுடன் படிக்கும் சக மாணவர்களான அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் தமிழ்செல்வன் (15), சொர்ணராஜ்(15), ரூபோ(14), ரிஸ்வான் (15) மற்றொரு ஆகாஷ் (15) ஆகியோரை காரில் ஏற்றிக்கொண்டு எண்ணூர் நோக்கி ஓட்டிச்சென்றான்.
காரை ஆகாஷ் வேகமாக ஓட்டிச் சென்றதாக தெரிகிறது. எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 11-வது தெரு அருகே சென்றபோது கார் திடீரென நிலைதடுமாறி தறிகெட்டு ஓடி அருகில் இருந்த செங்கல், மணல் விற்கும் கடைக்குள் புகுந்து மீண்டும் சாலையில் ஏறி சினிமாவில் வருவதுபோல சூழன்று நின்றது.
அப்போது காரில் இருந்து வெளியே தூக்கிவீசப்பட்ட தமிழ்செல்வன் அதே இடத்தில் பரிதாபமாக இறந்துபோனான். காரை ஓட்டிச் சென்ற ஆகாசும் பலத்த காயம் அடைந்தான். அவரை அருகில் இருந்தவர்கள் தூக்கிச்சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மற்ற 4 மாணவர்களும் காயமின்றி உயிர்தப்பினர்.
இந்த விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 14 வயது பள்ளி மாணவன் நண்பர்களுடன் காரை ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.