அணைக்கட்டு
ஆற்றுப்பகுதிகளில் ஆக்கிரமித்து பயிர்செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறினார்.
கலெக்டர் ஆய்வு
அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட அகரம் ஆறு மற்றும் பாலாற்றுப்படுகைகளில் பல ஆண்டுகளாக அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து வாழை, கரும்பு, நெல், தென்னை மரங்கள் பயிர் செய்து வந்தனர். இந்த நிலையில் ஆற்றுப்படுகையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை கையகப்படுத்த வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேள் பாண்டியன் அனைத்து தாசில்தார்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார்.
அதன்படி கடந்த ஒருவாரமாக மேல் வெட்டுவானம் அகரம் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 35 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்து பயிர் செய்த நிலங்களை தாசில்தார் விநாயகமூர்த்தி தலைமையில் அகற்றி வருகின்றனர். ஆக்கிரமிப்பு பணிகள் சரியாக நடைபெறுகிறதா என வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.
நடவடிக்கை
அப்போது ஆற்றுப் படுகையில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து கடந்த ஒரு வாரமாக அகற்றிய இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் விவசாயிகள் ஆற்றுப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து இனி வரும் நாட்களில் பயிர் செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை (நீர்வளம்) செயற்பொறியாளர் ரமேஷ், அணைக்கட்டு தாசில்தார் விநாயகமூர்த்தி, மண்டல துணை தாசில்தார்கள் குமரேசன், மெர்லின் ஜோதிகா, உதவி இயக்குனர், மற்றும் நில அளவர் சதீஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகர், கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.