புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில் அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சட்டமன்ற கூட்டத்தின்போது இங்கு நடைபெற்ற ஊழல், முறைகேடு குறித்து விசாரணை நடத்த கூறினோம்.
அரசு சார்பு நிறுவனங்களை மேம்படுத்த விஜயன் குழு கொடுத்த பரிந்துரையைக்கூட நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பி.ஆர்.டி.சி.யில் தொடர்ந்து முறைகேடு நடக்கிறது. அதன் தொடர் நஷ்டத்துக்கு நிர்வாக சீர்கேடும், முறைகேடுகளும்தான் காரணம்.
புதுவை அரசுத்துறைகளில் குரூப் டி பணியிடங்கள் காண்டிராக்ட் அடிப்படையில் நிரப்பப்படுகிறது. இதற்காக பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. அத்தகைய பணியிடங்களில் ஏற்கனவே சம்பளம் இல்லாமல் இருக்கும் சார்பு நிறுவன பணியாளர்களை விரும்பினால் பணியமர்த்தலாம். இதுதொடர்பாக கவர்னர் உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
புதுவையில் திறந்தவெளி விளம்பரங்களுக்கு தடை சட்டம் உள்ள நிலையில் ஆட்சியாளர்கள் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க சிலருக்கு விளம்பரங்கள் வைக்க அனுமதி கொடுத்துள்ளனர். சட்டம் உள்ள நிலையில் பேனர் வைக்க அனுமதி வழங்க பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறைக்கு அனுமதி கொடுத்தது யார்? சட்டத்தை தளர்த்த இவர்கள் யார்?
ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களுக்கு சொற்ப தொகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேனர் அச்சடிப்பவர்களை அதிகாரிகள் மிரட்டுகிறார்கள். பேனர் விவகாரத்தில் கவர்னர் கிரண்பெடி நல்ல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். எனவே இந்த விஷயங்களை கவர்னர் பொறுப்பில் விட்டுவிடலாம். பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை பேனர் வைக்க கொடுத்துள்ள அனுமதியை கவர்னர் ரத்துசெய்யவேண்டும்.
பேனர் விஷயத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் யாரும் கவர்னர் எடுக்கும் நடவடிக்கையில் தலையிடக்கூடாது. இதுதொடர்பாக கவர்னர் எங்களிடம் பேச அழைத்தால் நாங்கள் செல்வோம். எனது தொகுதியிலேயே 30 இடங்களில் பேனர் வைக்க அனுமதி அளித்துள்ளனர். இதற்கு ஆணையருக்கு அதிகாரம் கொடுத்தது யார்?
இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.