பெங்களூரு
தமிழ், கன்னட மொழி திரைப்படங்களில் நடித்த நடிகை ரம்யாபர்னா ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார். ஜனதா தளம் (எஸ்) கட்சி பிரமுகரின் மகனை அவர் கரம் பிடித்துள்ளார்.
கன்னடத்தில் ஹனிஹனி, பரமாத்மா, தூத்சாகர் உள்பட பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகை ரம்யாபர்னா. இவர் தமிழில் மத்திய சென்னை படத்திலும் நடித்துள்ளார். இந்த நிலையில், அவர் பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள துணை பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த ரகசிய திருமணம் கடந்த மே மாதம் 19ந் தேதி நடந்தது.
நடிகை ரம்யாபர்னா, தன்னை விட 2 வயது குறைந்த பகாத் அலிகான் என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டார். பகாத் அலிகான் ஜனதா தளம்(எஸ்) கட்சி பிரமுகர் அப்துல் என்பவரின் மகன் என்பதும், இவர் எம்.எல்.ஏ. ஜமீர் அகமதுகானின் உறவினர் என்பதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, நடிகை ரம்யாபர்னா கூறுகையில், நான் பகாத் அலிகானை பதிவு திருமணம் செய்து உள்ளேன். எனது தாய் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் உடல்நலம் தேறியவுடன் திருமண வரவேற்பு நடைபெற உள்ளது. இந்த வரவேற்பில் நண்பர்கள், குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்றார்.