மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி ஏகாம்பரேஸ்வர காமாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூர திருவிழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு

கிருஷ்ணகிரி ஏகாம்பரேஸ்வர காமாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூர திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நடந்த பால் குட ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி பழையபேட்டை நரசிம்ம சாமி கோவில் தெருவில் உள்ள ஏகாம்பரேஸ்வர காமாட்சி அம்மன் கோவிலில் 17-ம் ஆண்டு ஆடிப்பூர திருவிழா மற்றும் பால் குட ஊர்வலம் நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு காலை வேதபாராயணம் நடைபெற்றது. தொடர்ந்து கோ பூஜையும், விக்னேஸ்வர பூஜையும் நடந்தது. அதைத் தொடர்ந்து கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், சுதர்சன ஹோமங்கள் நடந்தன. காலை 11 மணிக்கு பால் குட ஊர்வலம் நடைபெற்றது.

விழாவின் தொடர்ச்சியாக அம்மனுக்கு பால் அபிஷேகம், மகா தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. அம்மனுக்கு மகா அபிஷேகம், கலசாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஏகாம்பரேஸ்வர காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மதியம் அன்னதான நிகழ்ச்சி நடந்தது.

இரவு சாமி ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி சாமி நரசிம்ம சாமி கோவில் தெரு, நேதாஜி ரோடு, காந்தி ரோடு, தர்மராஜா கோவில் தெரு, மோகன்ராவ் காலனி வழியாக காமாட்சி அம்மன் கோவிலை வந்தடைந்தது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.