துறையூர்,
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் இந்திராகாந்தி முசிறி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளக்கல்பட்டி, புத்தனாம்பட்டி, அபினிமங்கலம் பகளவாடி, செல்லிபாளையம், மருவத்தூர், தெற்கியூர்கோம்பை உள்பட பல்வேறு கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் செல்லிபாளையத்தில் விவசாயிகளுடன் சேர்ந்து களை பறித்து வாக்கு சேகரித்தார். அப்போது கிராம மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மக்களிடம் வாக்கு சேகரிக்கும்போது கடந்த முறை நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, உங்கள் பகுதியில் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, பஸ் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளேன்.
தற்போது மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக வாய்ப்பு கிடைத்துள்ளது. இளைஞர்களின் துயரை துடைக்க வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வீட்டிற்கு ஒருவர் அரசு வேலை பெற்றால் ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்க்கை தரமும் உயரும். மேலும் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மென்மேலும் திகழும். அடித்தட்டு மக்கள் பயன்படும் வகையில் சூரிய ஒளியில் இயங்கக்கூடிய அடுப்பையும் வழங்க உள்ளார்கள். எனவே பொதுமக்கள் கடந்த 2011-ம் ஆண்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தது போல் மீண்டும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் சேனை செல்வம், தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், மாவட்ட விவசாய அணி பொன் காமராஜ், ஒன்றிய கவுன்சிலர் சின்னம்மாள் சின்னச்சாமி, உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர்கள் அழகாபுரி செல்வராஜ், ராம்மோகன், முன்னாள் சேர்மன் மனோகரன், தகவல் தொழில்நுட்ப தெற்கு ஒன்றிய செயலாளர் கவிக்குமார் உள்பட கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.