மாவட்ட செய்திகள்

58 ஆண்டுகளுக்கு பிறகு அமராவதி அணையில் தூர்வாரும் பணி தொடங்கியது

அமராவதி அணையில் 58 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரும் பணி தொடங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தளி,

திருப்பூர், கோவை மற்றும் கரூர் மாவட்டங்களில் விவசாயத்தின் உயிர்நாடியாக விளங்குவது அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளாகும். இதில் திருமூர்த்தி அணை மூலமாக திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் 3 லட்சத்து 77 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அமராவதி அணை மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் அமராவதி பழைய ஆயக்கட்டு மற்றும் அமராவதி புதிய ஆயக்கட்டு பாசனங்கள் மூலமாக சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

இந்த அணைகள் மூலம் பாசன வசதி பெற்ற நிலங்களில் மூன்று போகம் விளைந்தது. குறிப்பாக நெல், கரும்பு, தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. இதற்காக அணைகளில் ஆண்டு முழுவதும் போதுமான தண்ணீர், பாசனத்திற்கு இருப்பு வைக்கப்பட்டு இருந்தது. மேலும் அமராவதி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் திட்டங்கள் மூலமும், திருமூர்த்தி அணைகளில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலமும் ஏராளமான கிராமங்கள் பயன் அடைகின்றன.

அமராவதி அணை

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளுக்கு மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது. அப்போது நீர்வழி தடங்களில் உள்ள மணல், பாறை துகள்கள் மற்றும் சிறு பாறைகள், காய்ந்த மரங்கள், செடி, கொடிகள், இறந்த விலங்குகள் ஆகியவை காட்டாற்று வெள்ளத்தால் அணைப் பகுதிக்கு அடித்து வரப்படுகிறது.

இதன் காரணமாக திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகளில் சுமார் 15 அடிக்கும் மேலாக சேறும், சகதியும் காணப்படுகிறது. இதனால் அணைகளின் நீர்தேக்கப்பரப்பளவு குறைந்தது. அதிகமாக மழை பெய்யும் காலங்களில் அணைகளில் போதுமான தண்ணீரை தேக்கி வைக்க முடிவது இல்லை. மாறாக அதிகப்படியான தண்ணீர் உபரி நீராக மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது.

இதனால் வறட்சி காலங்களில் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகளை நீர்ஆதாரமாக கொண்ட விளைநிலங்களுக்கும், குடிநீர் திட்டங்களுக்கும் குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக விவசாயிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வந்தனர். மூன்றுபோகம் சாகுபடி செய்யப்பட்ட நிலங்கள் ஒரு போக சாகுபடிக்கு மாறி, தற்போது ஒரு போக சாகுபடியே கேள்விக்குறியானது. அது மட்டுமல்லாமல் குடிநீருக்கே பெரும் பிரச்சினை ஏற்படும் நிலை உருவாகி விட்டது.

தூர்வாரும் பணி தொடங்கியது

அமராவதி அணை கட்டும் பணி 1953-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1958-ம் ஆண்டு அணை கட்டி முடிக்கப்பட்டது. அமராவதி அணையின் கொள்ளளவு 90 அடி. அணை கட்டி முடிக்கப்பட்ட காலங்களில் இருந்து இதுவரை தூர்வாரப்படவில்லை. எனவே அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளை தூர்வாரி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று திருப்பூர், கோவை மற்றும் கரூர் மாவட்ட விவசாயிகள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் நீர் நிலைகளை பாதுகாக்கும் பொருட்டும், அணைகள், குளங்கள், ஏரிகள் ஆகிய வற்றில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை தூர்வாரவும், அந்த மண்ணை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளவும் அரசு அனுமதி வழங்கியது.

அதைத்தொடர்ந்து முதன்முதலாக 58 ஆண்டுகளுக்கு பிறகு அமராவதி அணை தூர்வாரும் பணி தொடங்கியது. இந்த பணியை சி.மகேந்திரன் எம்.பி. தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ.சாதனைக்குறள், தாசில்தார் தயானந்தன், செயற்பொறியாளர் ராஜூ, உதவி செயற்பொறியாளர் தன்ராஜ், வருவாய் ஆய்வாளர் விஷ்ணுகண்ணன் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

திருமூர்த்தி அணை

திருமூர்த்தி அணை கட்டுமான பணிகள் 1962-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1967-ம் ஆண்டு முடிக்கப்பட்டது. இந்த அணை மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து வரும் பாலாற்றை தடுத்து 3 அடுக்கு முறையில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 60 அடி.

இந்த அணை கட்டப்பட்ட காலத்தில் பாசன நிலங்கள் 2 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 1 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. பின்னர் 3 மற்றும் 4-வது மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. அதன்படி 4 மண்டல பாசன முறையில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 77 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் திருமூர்த்தி அணை மூலமாக பாசன வசதி பெறுகிறது.

இந்த அணை திறக்கப்பட்ட பிறகு இதுவரை தூர்வாரப்படவில்லை. இந்த அணையும் 49 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இப்போதுதான் தூர்வாரப்படுகிறது. இந்த 2 அணைகளில் தேங்கி உள்ள வண்டல் மண்ணை அகற்றுவதால் அணையில் அதிக அளவு தண்ணீரை தேக்கி வைக்க முடியும். அணைகளில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை விளை நிலங்களில் இடுவதன் மூலமாக பயிர்களுக்கு தேவையான சத்துகளும் அதிகளவில் கிடைக்கும். இதனால் மகசூல் அதிகரித்து விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும்.

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.