மாவட்ட செய்திகள்

சரக்கு, சேவை வரியால் அனைத்து துறைகளும் வளர்ச்சி பெறும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

சரக்கு, சேவை வரியால் அனைத்து துறைகளும் வளர்ச்சி பெறும் என்று புதுக்கோட்டையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

புதுக்கோட்டை,

குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து வரும் அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். குறிப்பாக அ.தி.மு.க. வின் 2 அணிகளுக்கும், நன்றியை தெரிவித்து கொள்கிறேன். குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி பெறுவார்.

மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க...

தி.மு.க., காங்கிரஸ் கட்சிக்கு அடிமையா என்பதை ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும். கூவத்தூர் சம்பவம் தொடர்பாகவும், ஆர்.கே.நகர் தேர்தல் பணம் பட்டுவாடா குறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தி.மு.க. ஏன் திட்டமிட்டு கலவரத்தை உருவாக்கியது என்பது குறித்தும், ஸ்டாலினின் சட்டை கிழிந்தது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். சரக்கு, சேவை வரி நடைமுறைக்கு வந்தால் அனைத்து துறைகளும் வளர்ச்சி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காகத்தான் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக ரூ.1,500 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. மேலும் 750 ஆழ்கடல் மீன்படி படகுகள் வாங்குவதற்கு கடன் உதவி வழங்குவதற்காக ரூ.200 கோடியை முதற்கட்டமாக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அனைத்து வசதிகளும் கொண்ட இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைக்கப்படும்.

நதிநீர் இணைப்பு

நீட்தேர்வால் ஏழை மாணவர்கள், மருத்துவர்களாக முடியாது என்ற குற்றச்சாட்டு தவறானது. தற்போது கல்வி அமைச்சர் தமிழக கல்வித்துறையில் பல அறிவிப்புகளை செய்து வருகிறார். இது வரவேற்கத்தக்க ஒன்று. இத்தகைய நடவடிக்கைகளை முன்பே எடுத்திருந்தால் நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற்று இருப்பார்கள்.

ரஜினி அரசியலுக்கு வருவது வரவேற்க கூடிய ஒன்று. ஆனால் அரசியலுக்கு வருபவர்கள் நேர்மையாகவும், தூய்மையாகவும் இருக்க வேண்டும். மத்திய அரசு நதிநீர் இணைப்பு குறித்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விரைவில் அதற்கான நடவடிக்கை தொடங்கும். தமிழகத்தில் பா.ஜ.க. மிகவேகமாக வளர்ந்து வருகிறது. இதை பொறுத்து கொள்ள முடியாத அரசியல் கட்சிகளுக்கு வந்து உள்ள அரசியல் ஜூரத்தின் காரணமாக எதிர்க்கட்சிகள் பா.ஜ.க.வை தொடர்ந்து குறை கூறி வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

பயிற்சி முகாம்

இதையடுத்து பா.ஜ.க. சார்பில் பண்டிட் தீனதயாள் உபாத்யாய விஸ்தாரக் யோஜனா முழு நேர பணியாளர்களுக்கான பயிற்சி முகாம் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் ராம.சேதுபதி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் புரட்சிகவிதாசன், மாநில துணை தலைவர் சுரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினார். இதில் அறந்தாங்கி முன்னாள் நகராட்சி துணை தலைவர் முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.