விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட வேண்டிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கணினி மூலம் முதல்கட்ட பரிசோதனை செய்து குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான ஆ.அண்ணாதுரை கலந்துகொண்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கணினி மூலம் குலுக்கல் முறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஒதுக்கீடு செய்தார்.
குலுக்கல் முறையில் ஒதுக்கீடு
அதன்படி மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேவையான 3,979 மின்னணு வாக்குப்பதிவு கருவிகள் (பேலட் யூனிட்), 2,950 கட்டுப்பாட்டு கருவிகள் (கன்ட்ரோல் யூனிட்), வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் 3,037 வி.வி.பேட் கருவிகள் ஆகியவை கணினி மூலம் குலுக்கல் செய்யப்பட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வின்போது கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், திண்டிவனம் சப்-கலெக்டர் அனு, கோட்டாட்சியர்கள் விழுப்புரம் ஹரிதாஸ், திருக்கோவிலூர் சாய்வர்தினி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.