திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், காங்கேயம், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 3 ஆயிரத்து 343 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகம் மற்றும் பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. 4,100 பேலட் யூனிட்டுகள், 5,100 கண்ட்ரோல் யூனிட்டுகள், 4,400 விவிபேட் எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.
சட்டமன்ற தேர்தலையொட்டி பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த சட்டமன்ற தொதிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி மூலமாக ஒதுக்கீடு செய்யும் பணி திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
ஒதுக்கீடு
பேலட் யூனிட்டுகள், கண்ட்ரோல் யூனிட்டுகள், விவிபேட் எந்திரங்கள் ஆகியவை ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகள் வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவ்வாறு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வழங்கப்பட்டது.
இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகம் மற்றும் பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட உள்ளது. அங்கு பாதுகாப்பான அறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இருப்பு வைக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார், தேர்தல் தாசில்தார் முருகதாஸ், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.