மும்பை,
மும்பையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை பா.ஜனதா தலைவர் அமித்ஷா சந்தித்து பேசினார். அப்போது, ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதம் நிறைவடைகிறது. இதையொட்டி, அடுத்த ஜனாதிபதி தேர்தல் ஜூலை 17ந் தேதி நடைபெறுகிறது. நாட்டின் உயரிய பதவியான ஜனாதிபதி பதவியை கைப்பற்ற பாரதீய ஜனதா தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அதன்படி, அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, கட்சியின் அமைப்பை வலுப்படுத்தும் பொருட்டு கடந்த வெள்ளிக்கிழமை மும்பை வந்தார். நேற்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை பாந்திராவில் அமைந்துள்ள அவரது மாதோஸ்ரீ இல்லத்தில் அமித்ஷா சந்தித்து பேசினார்.
அப்போது, முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிசும் உடனிருந்தார். இந்த சந்திப்பு சுமார் 1 மணிநேரம் நீடித்தது.
இந்த சந்திப்பின்போது, ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதாவுக்கு சிவசேனா ஆதரவு அளிக்குமாறு உத்தவ் தாக்கரேயிடம் அமித்ஷா கோரிக்கை விடுத்ததாகவும், பா.ஜனதா அதன் வேட்பாளர் பெயரை அறிவித்ததும், ஆதரவு அளிப்பது பற்றி முடிவு செய்வதாக உத்தவ் தாக்கரே பதில் அளித்ததாகவும் சிவசேனா வட்டாரங்கள் தெரிவித்தன. அத்துடன், ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை பிரதமர் மோடி தான் முடிவு செய்வார் என்று அமித்ஷா கூறியதாகவும் சிவசேனா வட்டாரங்கள் தெரிவித்தன.
பா.ஜனதாவின் நீண்ட நெடிய கூட்டணி கட்சியான சிவசேனா, ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரமான நிலைப்பாட்டை எடுப்போம் என்று ஏற்கனவே கூறியிருந்தது. இது மட்டுமின்றி, கடந்த இரண்டு ஜனாதிபதி தேர்தலிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்து பா.ஜனதாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த முறை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் பெயரை ஜனாதிபதி பதவிக்கு சிவசேனா பரிந்துரை செய்தது. இதற்கு பா.ஜனதா சம்மதம் தெரிவிக்கவில்லை. இதைத்தொடர்ந்து, பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதனின் பெயரை சிவசேனா முன்வைத்தது. இதற்கும் பா.ஜனதா தரப்பில் இருந்து உறுதியான பதில் இல்லை.
இந்த சூழலில், பா.ஜனதா தலைவர் அமித்ஷா, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவு கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது.