திருச்சிற்றம்பலம்,
முன்பு தங்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க அரசு பள்ளிகளை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலையே இருந்தது. காலப்போக்கில் இந்த நிலை மாறி தனியார் பள்ளிகளின் அசுர வருகையின் காரணமாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க தனியார் பள்ளிகளையே நாடிச்சென்ற நிலை இருந்தது. இன்றளவும் அதே நிலையே நீடிக்கிறது.
அதே நேரத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளும் தேர்ச்சி விகிதத்திலும், சிறந்த மாணவர்களை உருவாக்குவதிலும் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்பது அடிக்கடி நிரூபிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவர்களை அதிக அளவில் சேர்ப்பதற்கு அந்த பள்ளி அமைந்துள்ள கிராமத்தினரே தங்க நாணயம், ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளனர். இந்த அறிவிப்பை பார்க்கும்போது பொதுமக்களின் மனதில் ஒருவித மாற்றம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இது பற்றிய விவரத்தை இங்கே பார்ப்போம்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ளது துலுக்கவிடுதி வடக்கு கிராமம். இங்கு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தற்போது 85 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டவர்கள் நடப்பு கல்வி ஆண்டில்(2018-2019) இந்த பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த வலியுறுத்தி உறுதி எடுத்தனர்.
இதனை தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியை வாசுகி, பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் ஆனந்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிரகலாதன், பேராவூரணி கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அங்கயற்கண்ணி, ஆசிரியர் ரவிச்சந்திரன் மற்றும் கிராமத்து இளைஞர்கள், மகளிர் குழுவினர் ஆகியோர் அரசு பள்ளியில் அதிக அளவில் மாணவர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் முதலாவது நாளில் 15 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். அப்போது புதிதாக சேர்ந்த ஒவ்வொரு மாணவருக்கும் தலா 1 கிராம் தங்க நாணயத்தை துலுக்கவிடுதி கிராமத்தை சேர்ந்த இளைஞர் அமைப்பினர் வழங்கினர். இந்த பகுதியை சேர்ந்த ஒன்றிய குழு முன்னாள் உறுப்பினர் செந்தில்குமார், புதிதாக சேர்ந்த 15 மாணவர்களுக்கும் தலா ரூ.1000 வீதம் 15 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து அரசு பள்ளியில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் தங்க நாணயமும், ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என்று துலுக்கவிடுதி கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
கிராம மக்களின் இந்த அறிவிப்பால் இந்த பகுதியை சேர்ந்த பெரும்பாலான பெற்றோர் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க முடிவு செய்து உள்ளனர். துலுக்கவிடுதி வடக்கு கிராம மக்களைப்போன்று தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்தினரும் இருந்து விட்டால் விரைவில் அரசு பள்ளிகள் அனைத்தும் மாணவ, மாணவிகளின் வருகையால் நிரம்பி வழியும் என்பதில் சிறிதளவும் அய்யமில்லை.