மாவட்ட செய்திகள்

அரக்கோணம் பகுதியில் மணல் தட்டுப்பாட்டால் பாதியில் நிற்கும் அரசு கட்டிட பணிகள்

அரக்கோணம் பகுதியில் கடுமையான மணல் தட்டுப்பாடு காரணமாக பல கோடி மதிப்பில் நடந்து வரும் அரசு கட்டிட பணிகள் பாதியிலேயே நிற்கும் அவல நிலை இருந்து வருகிறது.

அரக்கோணம்,

வேலூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க ஆபரேசன் சாண்ட் என்ற பெயரில் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு அதன்மூலம் மணல் கடத்தல் அடியோடு தடுக்கப்பட்டு உள்ளது. மணல் போதுமான அளவு கிடைக்காததால் வேலூர் மாவட்டத்தில் நடந்து வரும் அரசு கட்டிட பணிகள், தனியார் கட்டிட பணிகள் அடியோடு பாதிக்கப்படும் நிலை இருந்து வருகிறது.

அரக்கோணத்தில் ரூ.59 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பில் கட்டப்படும் தாலுகா போலீஸ் நிலையம், ரூ.82 லட்சம் மதிப்பிலான தீயணைப்பு நிலையம், ரூ.48 லட்சம் மதிப்பிலான துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மேல்பாக்கம் பகுதியில் கட்டப்பட்டு வரும் அரசு பள்ளிகட்டிட பணிகள் உள்ளிட்ட அரசு கட்டிட பணிகள் மணல் இல்லாததால் பாதியிலேயே முடங்கி கிடக்கிறது.

கட்டிடங்களுக்கு ஒரு டன் எம் சாண்ட் மணல் வாங்கி பயன்படுத்தினால் அதில் உள்ள ஈரப்பசை போன பின்னர் 800 கிலோ தான் மணல் வருகிறது. இதனால் ஒப்பந்ததாரர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. மணல் கடத்தும் வாகனங்கள் பிடிபட்டால் அபராதம் செலுத்தி வாகனத்தை மீட்டு வந்து மீண்டும் மணலை கடத்தி வந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருட்டு மணல் வாகனங்களை விடுவிக்க கூடாது என்ற சட்டத்தினால் மணல் திருட்டு 90 சதவீதம் குறைந்து உள்ளது. இதுவும் மணல் தட்டுப்பாட்டிற்கு ஒரு காரணமாகும்.

மணல் தட்டுப்பாடு குறித்து 30 ஆண்டுகளுக்கு மேலாக கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வரும் கட்டிட தொழிலாளர் சங்க நிர்வாகிகளில் ஒருவரான பழனி மேஸ்திரி கூறியதாவது:-

அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் நடந்து வரும் புதிய கட்டிட பணிகளுக்கு தினமும் அரக்கோணம், தக்கோலம், சேந்தமங்கலம், அரிகிலபாடி, நாகவேடு, குருவராஜபேட்டை, அன்வர்திகான்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கட்டிட பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக மணல் தட்டுப்பாடு இருப்பதால் வேலைக்கு வரும் தொழிலாளர்களை தினமும் வேலையில்லை என்று கூறி திருப்பி அனுப்பி விடுகிறோம். இதனால் கட்டிட தொழிலை நம்பி இருக்கும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கட்டிட கூலி தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் வட்டிக்கு பணம் வாங்கி கல்வி கட்டணம் செலுத்தி வருகின்றனர்.

மேலும் அன்றாட குடும்ப செலவுக்கு கூட வட்டிக்கு பணம் வாங்கும் சூழ்நிலை இருந்து வருகிறது. மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டிட தொழிலாளர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை இருந்து வருகிறது. மலேசியாவில் இருந்து கப்பல் மூலமாக இறக்குமதி செய்யப்படும் மலேசியா மணலின் விலையை விட வேலை நடக்கும் பகுதிக்கு கொண்டு செல்ல லாரி வாடகை மிக அதிகமாக உள்ளது. ஆகவே ஒவ்வொரு தாலுகா பகுதியிலும் ஆற்று மணலோ அல்லது மலேசியா மணலோ தங்கு, தடையில்லாமல் கிடைப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்தால் தான் கட்டிட தொழிலாளர்கள் பிழைக்க முடியும்.

நாளை (திங்கட்கிழமை) கட்டிட மேஸ்திரிகள் மற்றும் கட்டிட தொழிலாளர் சங்கத்தினர் வேலூர் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து எங்களது பிரச்சினைகள் குறித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

எனவே, கட்டிட பணிகளுக்கு அத்தியாவசிய பொருளாக கருதப்படும் மணலை தமிழக அரசு தாராளமாக வழங்க கூடுதல் மணல் குவாரிகளை திறந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்டிட தொழிலாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...