ஈரோடு,
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், வறட்சி நிவாரணம் கேட்டு விவசாய கூலித்தொழில் செய்யும் பெண்கள் போராட்டம் நடத்தினர்.
ஈரோடு மாவட்ட அனைத்து மகளிர் சுய உதவிக்குழு ஒருங்கிணைப்பாளர் வடிவேல் தலைமையில் 300 பெண்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென தரையில் அமர்ந்து, வறட்சி நிவாரணம் கேட்டு போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் மாவட்ட வருவாய் அதிகாரி சதீசை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:
ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கிராம பகுதிகளிலும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இந்த குழுவில் உள்ள பெண்கள் தினசரி விவசாய கூலி வேலை செய்து வருகிறார்கள். தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் விவசாய தொழில் முடங்கி உள்ளது. இதனால் இதனை நம்பி உள்ள விவசாய கூலி தொழிலாளர்கள் எவ்வித வேலைவாய்ப்பும் இல்லாமல் குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு தனியார், பொதுத்துறை, கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் சார்பில் கிராமங்களுக்கு நேரடியாக சென்று ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை சிறு கடன்கள் வழங்கப்பட்டு உள்ளது. கடன் தொகையை வாரம் அல்லது மாதம் ஒருமுறை அந்தந்த கிராம பகுதிகளுக்கு நேரடியாக சென்று நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் வசூலித்து வருகிறார்கள்.
தற்போது கடும் வறட்சி காரணமாக விவசாய கூலித் தொழிலை நம்பி உள்ள மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் கடனை திருப்பி செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. இதனால் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் தரக்குறைவாக பேசி வருகிறார்கள்.
எனவே மகளிர் சுய உதவிக்குழு பெற்ற சிறு கடன்களை வசூலிக்க தடை செய்யவேண்டும். அல்லது கடன்களை திருப்பி செலுத்த கால அவகாசம் வழங்கவேண்டும். இதுகுறித்து அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை கூட்டுறவு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். விவசாய கூலித் தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ.25 ஆயிரம் வறட்சி நிவாரணமாக வழங்கவேண்டும்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் அவர்கள் கூறி இருந்தார்கள்.
மேலும் இவர்கள் கொடுத்திருந்த மற்றொரு மனுவில், பெருந்துறை அருகே உள்ள மொட்டையங்காட்டுப்புதூரில் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.