மாவட்ட செய்திகள்

கும்பகோணம் விடுதி அறையில் தீயில் கருகி பிணமாக கிடந்தவர் உதவி பேராசிரியர்

கும்பகோணம் விடுதி அறையில் தீயில் கருகி பிணமாக கிடந்தவர் உதவி பேராசிரியர் என்பதும், அறை யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததோ, அந்த நபர் தற்கொலை செய்யவில்லை என்பதும், உதவி பேராசிரியர் தனது நண்பரின் பெயரில் அறை பதிவு செய்ததால் குழப்பம் ஏற்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றின் அறையில் இருந்து நேற்று முன்தினம் இரவு புகை வெளிவந்தது. இதையடுத்து விடுதி ஊழியர்கள் மற்றும் விடுதியில் தங்கி இருந்தவர்கள் அந்த அறைக்கு சென்று பார்த்தபோது ஒருவரின் உடல் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அங்கிருந்து ஊழியர்கள் மற்றும் தங்கி இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். பின்னர் அறையில் கருகிய நிலையில் கிடந்த உடல் மீட்கப்பட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த நபர் யார்? எப்படி இறந்தார்? தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? என கும்பகோணம் மேற்கு போலீசார் விசாரணையை தொடங்கினர்.

நண்பர் பெயரில் அறை பதிவு

விசாரணையின் ஒரு பகுதியாக போலீசார் விடுதியின் அறை பதிவு புத்தகத்தை பார்வையிட்டனர். அந்த புத்தகத்தில் தீயில் கருகிய நிலையில் பிணம் கிடந்த அறை ஆரலூரை சேர்ந்த ராஜ்குமார் (வயது36) என்ற பெயரில் பதிவாகி இருந்தது. இதனால் தீயில் கருகி இறந்த நபர் ராஜ்குமார் என முடிவு செய்த போலீசார், விடுதியில் பதிவாகி இருந்த முகவரிக்கு தகவல் தெரிவிப்பதற்காக சென்றனர்.

அப்போது ராஜ்குமார் தற்கொலை செய்யவில்லை என்பதும், அவர் தனது வீட்டில் உயிரோடு இருப்பதும் தெரியவந்தது. இதனால் குழப்பம் அடைந்த போலீசார், விடுதி பதிவு புத்தகத்தில் உங்கள் பெயர் பதிவாகி உள்ளதே? என கேட்டு வீட்டில் இருந்த ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜ்குமார், தனது நண்பர் திருநாகேஸ்வரம் அசோக் நகரை சேர்ந்த சீனிவாசன் மகன் கார்த்திக் (37) என்பவருக்காக தனது பெயரில் விடுதி அறையை பதிவு செய்தது தெரியவந்தது.

உதவி பேராசிரியர்

மேலும் தீயில் கருகி பிணமாக கிடந்த நபர் கார்த்திக் என்ற திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. கும்பகோணத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வந்த கார்த்திக், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது எரித்துக் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உதவி பேராசிரியர் ஒருவர் தனது நண்பரின் பெயரில் விடுதி அறையை பதிவு செய்ததால் ஏற்பட்ட இந்த குழப்பம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...