ஊட்டி,
குடிநீர் அணைகள்
ஊட்டி நகருக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதுதவிர நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பார்சன்ஸ்வேலி, டைகர்ஹில், மார்லிமந்து, தொட்டபெட்டா அப்பர், லோயர் உள்பட பல்வேறு அணைகள் உள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு போதிய அளவு வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. 52 சதவீதம் அளவிற்கு பருவமழை குறைந்ததால் பல்வேறு அணைகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்து விட்டது. இதனால் அணைகள் வேகமாக வறண்டு வருகின்றன. இதில் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பார்சன்ஸ்வேலி அணையில் மட்டும் 32 அடி (மொத்த கொள்ளளவு 58 அடி உயரம்) உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. இதற்கு அடுத்து மார்லிமந்து அணையில் 4 அடிக்கும், டைகர்ஹில் அணையில் 2.8 அடி உயரத்துக்கும், தொட்டபெட்டா அப்பர் அணையில் 2.1 அடிக்கும் தண்ணீர் உள்ளது.
பார்சன்ஸ்வேலி அணை தவிர மற்ற அணைகளில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் வருகிற கோடை காலத்தில் ஊட்டி நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஊட்டி நகராட்சியில் மொத்தம் 11 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளன. இதில் 7 ஆயிரம் குடிநீர் இணைப்புகளுக்கு பார்சன்ஸ்வேலி அணை மூலம்தான் தண்ணீர் வழங்கப்படுகிறது.
இதுதவிர ஊட்டி நகராட்சிக்குட்பட்ட வண்ணாரபேட்டை, ஓல்டு ஊட்டி, பாம்பேகேசில், நொண்டிமேடு உள்ளிட்ட பகுதிகள் முழுமையாக பார்சன்ஸ்வேலி தவிர்த்து பிற குடிநீர் ஆதாரங்களை மட்டுமே நம்பி உள்ளது. இதன்காரணமாக இந்த பகுதிகளில் தற்போதே கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் சீசனை அனுபவிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். எனவே இவர்களுக்கு போதுமான குடிநீரை வழங்க தற்போது அணையில் தண்ணீர் இல்லை.
எனவே குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கவும், பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் போதுமான அளவு தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் ஊட்டி 3வது குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து ஊட்டி நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) டாக்டர் பிரபாகர் கூறியதாவது:
ஊட்டி நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 3வது குடிநீர் திட்டத்திற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளோம். இந்த குடிநீர் திட்டப்பணி முடிக்கப்பட்டால் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டு பகுதிகளுக்கும் பார்சன்ஸ்வேலி தண்ணீரை தங்கு தடையின்றி வழங்க முடியும். எனவே பார்சன்ஸ்வேலி அணையில் 33 அடிக்கு கீழ் தண்ணீரை திறந்து விட வேண்டாம் என்று மின்சார வாரியத்திற்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.
இதுதவிர நகரில் 2 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான தண்ணீரை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான குடிநீரை தங்கு தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.